Skip to main content

'தீக்குள் விர​லை​ வைத்த​போது பாரதிக்கு இனித்திருக்கலாம்... ஆனால்" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #2

Published on 13/09/2019 | Edited on 14/09/2019

உண்மையில் அந்த டெலிபோன் தகவலை என்னால் நம்ப இயலவில்லை, இது எப்படி சாத்தியமாகும், அவள் நிச்சயம் கோழையில்லை, என் மனதிற்குள் ஆயிரம் போராட்டம், அந்த இடம் போய் சேரும் வரையில் நிலையாக இருந்து வண்டியை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை ஆட்டோ ஒன்றை அமர்த்தி போகவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். நி​னைச்சா மாதிரி​யே நான் நல்ல மார்க் எடுத்தாச்சு, எங்க அக்கா​வை விடவும். இனிமே அவ படிக்கிறே மீனாட்சி காலேஜ்ஜிலேயே சேரணும் நிறைய படிக்கணும், நல்ல வேலையிலே சேர்ந்து நிறைய சம்பாரிக்கணும். எனக்குள்ள நிறைய கனவு இருக்கு அதையெல்லாம் செயல்படுத்தணும்.

பசு​மை நி​றைந்த நி​னைவுக​ளே என்று நாங்கள் பாடிக்களித்த அந்த பிரிவுவிழா அரசி அன்று பேசிய வார்த்தைகள் இன்று என் காதிற்குள் ஒலித்தது. நாங்கள் இருவரும் பள்ளித்தோழிகள் அவள் பெயர் பெண்ணரசி. நான் பாக்யா, இணைபிரியா தோழிகள் என்றால் எங்களைத்தான் சொல்லுவார்கள். எத்தனை எத்தனையோ ஏற்றங்கள் மிகுந்த வாழ்விற்கு அவள் செல்வாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவளின் இறுதியாத்திரைக்கு செல்ல வேண்டி வரும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை, சற்றே கருத்த நிறம் என்றாலும் அவளின் முகம் அத்தனை அழகானது. இளமையின் பூரிப்பும் சேர்ந்து அவளின் எழிலைக் காட்டிக்கொடுத்திருந்தது என்பது உண்மையே, எல்லா விவாதங்களுக்கும் விடையிருந்தது எங்களில் அவளின் இறுதியாத்திரைக்கு மட்டும் விடையில்லாமல் போய்விட்டது. அரசி எதற்காக இந்த முடிவை எடுத்திருப்பாள். எத்தனையோ கனவுகளை உள்ளடக்கிக்கொண்டு இருந்த உனக்குள் திடுமென்று இறப்பு என்ற உணர்வு ஏன் வந்தது. அவள் வீட்டு வாசலில் என்னை எதிர்பார்த்து நின்றிருந்த மற்ற தோழிக​ளோடு நானும் கலந்து ​கொண்​டேன்.

அவள் அங்கிருப்பதற்கான இல்​லையில்​லை அது அங்கிருப்பதற்கான அடையாளம் இல்​லை நேத்தே எடுத்துட்டாங்களாம் பாக்யா. எங்களுக்கு காலையில் தான் தெரியும்?!

தொண்​டையில் அடைத்துக்கொண்டு இருந்த துக்கத்தை முழுங்கினேன். ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்திய வலி அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நிலைத்திருந்தது. அவங்க அம்மாவைப் பார்க்கவே மனம் வலித்தது. அமைதியாய் இருந்தோம். மற்ற தோழிகள் ஏதோஏதோ ஆறுதல்படுத்துவதற்காக பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னால் யாருடைய முகத்தையும் பார்த்து பேச முடியவில்லை, அவளுடைய நினைவுகளின் சுவாசம் எல்லாம் அந்த வீட்டையே சுற்றிக்கொண்டு இருப்பதைப் போல் இருந்தது, நான்கு சட்டங்களுக்குள் சிறைபட்டுக்கொண்டு இருந்த அவளின் முகம் ஊதுவத்தியின் வாச​னை​யை முகர்ந்து​கொண்​டே என்னைப் பார்த்து வேதனையோடு சிரிப்பதைப் போல் இருந்தது. எங்க​ளைப்​போல​வே தாமதமாக வந்தவர்க​ளோ அல்லது அங்​கேயிருந்தவர்க​ளோ என்னம்மா நடந்தது என்று அவர்களின் தாயிடம் விசாரித்துக்​கொண்டு இருந்தார்கள்.

​பெத்த பிள்​ளை தப்பு பண்ணா கண்டிக்ககூடாதா? யா​ரோ ஒருத்தன் எழுதின காதற் கடிதாசி​யோட நிக்கு​றா? இவளுக்கு முன்னாடிப் பிறந்தவ அவ, இது வரைக்கும் ஏதாவது தப்பு பண்ணியிருப்பாளா? அதுக்குள்ளே இவளுக்கு என்ன அவசரம், நீங்கயெல்லாம் கூடப் படிக்கிறவங்கதானே ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா. அவ இப்படி கெட்டுப்போவான்னு நான் நினைக்கலையே பெருங்குரலெடுத்து அழுதார்கள். அரசி அப்படிப்பட்டவள் இல்லைன்னு கத்தவேண்டும் போல இருந்தது எனக்கு. ஆனால் கேட்பார் யாரும் இல்லை, அவளின் இலக்கு எல்லா​மே படிப்பின்​​​மேல்தா​னே இருந்தது.

ஏய் நாளைக்கு லவ்வர்ஸ் டே நானும் என் ஆளும் சினிமாக்குப் போறோம் இல்லையா? நீங்க​ளெல்லாம் ஆளுக்கு ஒரு இடம் சொன்னார்கள். அரசி நீ எங்கடி போறே?

எனக்கு காதலும் இல்லை காதலனும் இல்லை. அதனால் எங்கேயும் போகப்போறதும் இல்லை, நேரத்தை விரயம் செய்வதுதான் இந்த காதல், நான் தொட வேண்டிய உயரங்கள் நிறைய இருக்கு அதை தொட்டபிறகு காதல் என்னைத் தேடிவரும். அப்போ நானும் என்னோட ஆளு கூட போயிட்டுப்போறேன். அத்தனை திடமாய் சொன்னவளா காதல் வலையில் சிக்கியிருப்பாள் நிச்சயம் இருக்காது தாய் அறியாத சூலாக அவள் இருந்திருக்கிறா​ளே என்று வலித்தது இவர்களின் புரிதலில்தான் தவறுயிருக்கும் என்று உணர்ந்து கொண்டேன். அவளுக்குதான் அக்கா​வை விடவும் கலர் கம்மின்னு​ நி​னைப்பு முகம் பளிச்சினு இருக்கனுமின்னு என்னென்மோ போடுவா ஆனா இப்போ? அந்த முகமே கோரமாப் போச்சு,​ நெருப்பு ​வைத்துக் ​கொள்ளும் அளவிற்கு அந்தப் பையன் மேல அத்தனை அன்பா இருந்திருக்கா போலயிருக்கு? அங்கிருந்தவர்களின் ​பேச்சில் எனக்கு மூச்சு முட்டுவதைப்போல் இருந்தது ​வெளியில் வந்​தேன் எதிர்சாரியில் சுகுமார் பித்துப் பிடித்தார்ப்போல நின்றுகொண்டு இருந்தான்.

நான் அவனை எரித்து விடுவதைப் போல் பார்த்தேன். இப்படியாகும் என்று நான் நினைக்கலை பாக்யா அவளை உண்மையா விரும்பினேன், வேணான்னு போனவளை விரட்டி விரட்டி கொன்னுட்டேன். முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் எனக்கு அங்கே நிற்கவே பிடிக்காமல் அவனையும் கடந்து வந்தான்..? உனக்கு ஒரு லட்டர் வந்திருக்கு? அம்மா கொண்டுவந்து நீட்டிய கடிதத்தை பிரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது அதில் என் அரசியின் கையெழுத்து.

அன்பு பாகிக்கு,

இந்தக் கடிதத்தை எழுதும் போது நான் உன்னை விட்டு வெகு தொலைவில் போய் இருப்பேன் இப்போது நான் எடுத்திருக்கும் முடிவு என் மனதிற்கு எதிரானது. நான் உன்னை விட்டு உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். பத்து நாட்கள் முன்பு சந்தோஷமாக கனவுகளைப் பகிர்ந்துகொண்டவள் ஏன் இத்தனை பெரிய முடிவெடுக்கிறாள் என்று என்னைப் பற்றிய சந்தேகம் உனக்கு இருக்கும். அதை உனக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று ஒரு ஊந்துதல்.

அவள் எழுத்தின் வழியே காட்சிகள் விரிந்தது. வழக்கம் போல் அன்றும் என்வேலைகள் எல்லாம் முடிந்து கல்லூரிக்கு செல்வதற்காக வாங்கிய புத்தகங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு இருந்தேன். வாசலில் நிழலாடியது. எதிர்வீட்டு சுகுமார் நின்று கொண்டிருந்தான். அம்மா சக்கரை இருந்தா வாங்கிட்டு வரச்சொன்னாங்க? நீ காலேஜ் ஜாயின் பண்ணிட்டியா? நான் மெளமான சக்கரையை மட்டும் எடுத்துக் கொடுத்தேன் ஏன் பேச மாட்டீயா அரசி?! நானும் எத்தனையோ தடவை என் மனசிலே உள்ளதை சொல்லிட்டேன். இந்த வயசில ஏன் இப்படி மூடியா இருக்கே. உன் பிரண்ட் சரஸ்வதி கூட நாதனுக்கு டிக்ளர் பண்ணிட்டா தெரியுமா?
 

 

யாரைப் பத்தியும் எனக்கு தேவையில்லை இந்தா சக்கரை போய் வேலையைப் பாரு? இப்படி எடுத்தெரிஞ்சு பேசாதே? போ சுகுமார் அம்மா வந்திடப்போறாங்க? சரி நான் சொன்ன விஷயத்தை மறந்திடாதே? அவன் அழுத்தமாய் சொல்லிவிட்டு கிளம்பும் போது அக்கா அவனைத் தாண்டிக்கொண்டு வந்தாள். என்னவாம் இவனுக்கு? சக்கரை கேட்டான்? அதுக்கா இத்தனை நேரம் பேசிட்டு இருந்தான். நான் வாசல்ல இருந்து பார்த்திட்டே வர்றேன். இதெல்லாம் என்ன பழக்கம்?! அக்காவின் பார்வைக்கும் பேச்சுக்கும் அப்போது எனக்கு அர்த்தம் புரியவில்லை, கோபம் தான் வந்தது. வேண்டுமென்றே அவளைச் சீண்ட வேண்டும் என நினைத்து அவன் என்னை லவ் பண்றானாம்? அதை சொல்லிட்டு இருந்தான். இந்த மூஞ்சியப் போயா? நக்கலான அவளின் பேச்சில் எனக்கு மீண்டும் கோபம் எழுந்தது.

என்ன செய்ய தோல் வெளுப்பா இருந்தாலும் உனக்கு அமையலேயேன்னு பொறாமை? அததுக்கு ஒரு ராசி வேணும்க்கா உனக்கது இல்லை, அக்காவின் மனதிற்குள் விஷம் இருப்பதை அறியாமல் நான் வேடிக்கையாய் பேசிவிட்டேன். அதன் விளைவு இத்தனை மோசமாய் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை பாகி. அவள் நான் சுகுமாரை காதலிப்பதாக வீட்டில் சொல்லிவிட்டாள். அன்றிரவு அத்தனை மோசமான இரவுதனை நான் சந்தித்ததே இல்லை, ஒரே வீட்டிற்கள் தனித் தனித் தீவுகளாய் நாங்கள் அனைவரும் ஏதோ குற்றவாளியை ஒதுக்கி வைப்பதைப் போல் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் பாகி. என்தரப்பு நியாயத்தை யாருமே கேட்கவில்லை.

இதுதான் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்று நினைக்கும் போது என் மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது பாகி. என்னை வெறுக்கும் சொந்தங்களுடன் வாழ விரும்பவில்லை, சரி பிரச்சனைக்கு காரணம் சுகுமார் அவனையே விட்டு பேச சொல்லிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்றைய தினமும் எனக்கு பேரிடி காத்திருந்தது. அதிகாலையில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தபோது சுகுமார் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அரசி இந்தா இதைப்படி நான் உன் மேல் கொண்ட காதலை அப்படியே எழுதியிருக்கிறேன். என்று நான் பேச வருவதற்குள் அவசரமாய் ஓடிப்போய்விட்டான். சுகுமார் சுகுமார் நான் சொல்றதைக் கேளுங்க அரசி என்று அம்மாவின் குரல் மேற்புறம்பார்த்துக்கொண்டு லட்டரை மறைத்தபடியே நான் மாடியேறினேன்.

காலையிலே அவங்கிட்ட என்ன பேச்சு நேத்து இல்லைவே இல்லைன்னு சாதிச்சியே......! ஆளாளுக்குப் பேசினார்கள். என்னைப் பேசவிடவில்லை, நான் தப்பு செய்யாதவள்னு எப்படி நிரூபிக்க முடியும். நீங்க​ளெல்லாம் காத​லைப் பற்றி ​பேசும்​போது அது மயக்கம் தரும் கனவு அதில் சஞ்சரிக்க இனிக்கும் என்றுதான் ​சொன்னீர்கள் என் வ​ரையில் அது உண்​மையில்​லை. என் மீதான நம்பிக்​கை​யைத் தகர்த்த என் கனவு​க​ளை நசுக்கிய அந்த​காதலின் தீண்டல் எனக்கு​ வேண்டாம் ஆனால் நான் ​சொன்னால் அ​தை நம்பப்​போவது யார் காதல் தீண்ட​ வேண்டாம் நான் தீ​யை​ போர்த்திக்​கொள்ள​போகி​றேன். என்​னைப் புரிந்து ​கொள்ள​வி​ல்​லை​யே என்று இவங்க மேலே எல்லாம் கோபம் வந்தாலும் என் விதி இதுவா இருக்க அவர்க​ளை​நொந்து என்ன பயன். உன்கிட்டே சொல்லனுமின்னு தோணுச்சு.. நான் வர்றேன் இல்​லையில்​லை ​போ​றேன் பாக்யா. இனிமே உனக்குப் போட்டியே இருக்காது நீயாவது நல்லா படி.... கடிதம் அத்துடன் முற்றுப்பெற்று இருந்து. தீக்குள் விர​லை​ வைத்த​போது பாரதிக்கு இனித்திருக்கலாம். அரசியின் அலறல் மட்டும் இருபது வருடங்க​ளைக் கடந்து இப்போதும் காதிற்குள்..!

 


 

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.