Skip to main content

"தசையினை ரசித்த கண்கள் இன்று அதற்கு அடியில் இருக்கும் ரத்தத்தையும், சீழையும் ரசிக்குமா.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #19

Published on 18/01/2020 | Edited on 02/03/2020

பொங்கல் நான்கு நாட்கள் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும் இன்றி காணும் பொங்கல் அன்று பொங்கி வழிந்த கூட்டத்தை மெரினாத் திடலில் காண முடிந்தது. மனிதர்களோடு பேசும் தருணங்களை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு தொல்லைப் பேசியின் தொந்தரவு இல்லாத நேரம் அது சுவற்றின் ஓரம் இரத்த கலரில் அமர்ந்திருக்கும் போன், பக்கத்து வீட்டில் பூட்டு போட்டு இருக்கும் அதை தரிசிப்பதற்காகவே கைப்பந்தை வீசும் தம்பியை வைதபடியே அத்தை உங்க ஜன்னல் தம்பி பந்தைப் போட்டுட்டுடான் என்று வழிந்து நான் கைவேலையா இருக்கேன் நீயே வந்து எடுத்துக்கோ என்று அத்திப் பூத்தார்மாதிரி அவர்கள் சொல்ல காத்திருந்து உடனே ஓடிப்போயி பந்தைத் தேடும் சாக்கில் போனின் வழவழப்பான ரீசிவரை தொட்டு தடவிப் பார்த்த நாட்கள் எல்லாம் கண்முன் வந்து போயின. நன்றாக நினைவிருக்கிறது நான் முதன்முதலில் நாலனா கொடுத்து ஒரு ராங்நம்பருக்கு சுற்றியது அதிலிருந்து புத்தகம் சுமந்த பையின் கனத்தையும் பொருட்படுத்தாது பிளாட்பார நெரிசலில் பழைய பேப்பர் கவர்களுக்கு நடுவில் கருப்பும் மஞ்சளும் கலந்த நீளமான தாங்கியில் தொங்கிக் கொண்டு என்னை வசீகரித்த அந்த தொலைபேசியில் தான் நான் என் முதல் விரல்களைப் பதித்தேன்.

 

fg



அன்றே அதனுடனான காதல் என்னை தத்தெடுத்துக் கொண்டது. எப்படியாவது நம் வீட்டுக்கும் ஒரு லேன்லைன் தொலைபேசியை நாம் வாங்கிடலாமா என்று அப்பாவிடம் கேட்டபோது அவர் என்னை சத்தியமான கொலை வெறியோடு பார்த்தார். அன்றாடங்காய்ச்சியான எனக்கு தினம் தினம் உன் வயிற்றை நிரப்பவே பணம் போதவில்லை 600 ரூபாய் வாடகையில் இருந்து 2500 ரூபாய்க்கு வாடகைக்கு வந்து எங்கே கழுத்தில் துண்டைப் போட்டு கேட்டு விடுவானோ வீட்டின் உரிமையாளர் என்ற பயத்தில் திரியும் அவர் என்னை அப்படி பார்த்தது சரிதான் என்று புரிந்துகொள்ளும் வயது அப்போது இல்லை எனக்கு பேசியின் மீதுள்ள காதல் பேசாமலேயே தொடர்ந்தது.

பள்ளி முடிந்து படிக்க வசதியின்றி ஒரு பொட்டிக்கடைப் போன்ற அலுவலகத்தில் வேலையில் நான்கு புறமும் பிளைவுட்டால் தடுக்கப்பட்ட ஒரு சிறு அறை, அந்த அறையில் எனக்கென்று ஒரு டைப்ரைட்டர், பில் புத்தகங்கள் நான்கு வேலையாட்கள், அவர்கள் தினமும் காலையில் எந்த கம்பெனிக்கு சென்று பொருட்களை டெலிவரி செய்யவேண்டும். பழுதானவற்றை சரிசெய்ய வேண்டும் என்பதை முகவரியோடு குறித்து கொடுத்து அனுப்பிவிட்டால், மாலை ஆறுமணிவரை அந்த பத்துக்குப் பத்து அறை என்னோட ராஜ்ஜியம் எனக்கே எனக்கென்று ஒரு கருப்பு நிற பட்டன் டெலிபோன் கிளையண்ட்க்கு போன் செய்யலாம் வர்ற அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம் என நானே ராஜா நானே மந்திரி. மதிய உணவைக் கூட பாட்டி வீட்டில் இருந்து இரவலாய் பெற்றாலும் உடலின் வனப்பில் வஞ்சனையின்றி செழுமைத்தனம் எட்டிப்பார்த்துக் கொண்டே தான் இருந்தது.
 

kl



தீதும் நன்மையும் பிறர் தர வாரா என்ற வாக்குப்படி என் பேசியின் காதல் எங்கோ ஒரு இடத்தில் இடறியது. ஒரு அழைப்பு மெல்ல மெல்ல அடிமைப்படுத்தி அக்கறை கொள்ள வைத்து அடிக்கடி அழைக்கவும், அழைப்பைப் பெறவும் மனம் ஏங்கியது டெலிபோன் ஒயரின் சுருக்கங்களை என் வெட்கம் கலந்த பேச்சுகள் மேலும் சுருக்கமாகிக் கொண்டது. நாளாக நாளாக காதல் வளர்ந்து கனியப் போகும் நேரம் நான் காதல் என் ற பெயரில் தவறான ஒரு ஏமாற்றத்தை சந்திக்கப்போகிறேன் அது பொருளாதராத்திலும் சேர்த்துத்தான் என்பதை உணர்ந்த போது மீண்டும் வறுமையின் கரங்களில் என் எதிர்காலத்தை ஒப்புவித்து இதே போல் சாம்பார் சாதத்திற்கும் உருளை பொரியலையும் அடுத்தவர்கள் தட்டில் இடுவார்களா என்று யோசனை மண்டையில் குடைந்தது?!

அந்த இணைப்பைத் துண்டிக்கவே நான் அந்த அலுவலகத்தின் வாசலைக் கடந்தேன். ஆனால் தினமும் தொலைபேசியின் காதல் என்னை அலைக்கழித்தது. அடுத்த வேலை நான்கு தடுப்புகள் கொண்ட சிறைச்சாலைப் போன்றதொரு அமைப்பு இம்முறையும் எனது மேஜையை பேசி அலங்கரித்தது ஆனால் அழைப்புகள் அனைத்தும் மற்றொரு மேஜையின் மேல் இருந்து வெறும் இண்டர்காமாய் என் காதலை காம்மாகவே வைத்திருந்தது. ஏப்ரல் மே போலவே பசுமையிழந்து வெறும் வெக்கையாய் கடந்த அந்த தினங்களை கலர்புல்லா மாற்றியது அடுத்த வேலை......பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கும் ஒரு வணிக வளாகத்தில் அப்போதுதான் அவள் எட்டிப்பார்த்தாள். மொபைல் போன்...

என்மாதிரி ஆட்களுக்கு எல்லாம் எட்டாத கனவாய், மற்றவர்களின் கைகளில் மிதந்த அந்த கருப்பு சாதனத்தின் கனத்தின் மேலும் நான் காதல் கொண்டேன் வெறித்தனமாய். சில ஆயிரங்களை மாதம் முழுமைக்கும் காபந்து பண்ண வேண்டிய ஜீவனின் ஆசைகள் கரைகடந்து கொண்டிருக்கிறதே என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள் ? ஆம் ! பேசியின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் என் விழிகள் ஏங்கத் தொடங்கியிருந்தது. நம்பர்களில் நண்பர்கள் சேர, நாட்கள் எனக்கு நாலையும் அறிய வைத்தது நான் நான்கு வருடங்களுக்கு முன்பு வரையில் திரைகளின் மறைவில் இருந்த இருள் கையடக்க அலைபேசியின் திரையின் வெளிச்சத்தில் பதிய தொடங்கிய போது எனக்கு முன்னால் விரிக்கப்பட்ட வலைகளில் நான் பலவற்றில் சிக்கி சிக்கி கால்கள் அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டாலும் கைகள் ஆசையோடு என் அலைபேசியின் தொடுதிரையினை வருடின. தோண்ட தோண்ட புதைந்து கொண்டு வெளிவரும் அகழ்வாராய்ச்சியின் நிலத்தைப் போல, அதனுள் உலகமே! ஒய்யாரமாய் என்னை செதுக்கி செதுக்கி ஒவியமாய் உலகிற்குக் காட்டியது. தொடுதிரைகள் தொடத் தொட என் நேரங்களை ஒரு பிசாசைப் போல் தின்னத் தொடங்கியிருந்தது.

 

jh



நான் போட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் அனர்த்தமான அர்த்தங்களுடன் நான்கு சுவர்களுக்குள் என் அந்தரங்கம் என நினைத்த அத்தனையும் நானூறு வெப்சைட்டுகளில் காதல் கண்ணை மறைக்கும் பழமொழியைக் கேள்விப் பட்டு இருக்கிறீாகளா அப்படித்தான் என் கைப்பேசியின் காதல் என் கண்ணை மட்டும்தான் மறைத்தது. ஆனால் பலபேரின் கண்களுக்கு விருந்தாக்கி விட்டிருக்கிறது. சில வலைகள் நானாக சுமந்தது ஆனால் இந்த வலைகள் சிலந்தியாய் ஊராரின் நூல்முனைகளைக் கொண்டு என்னை மூடிவிட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டது. நான் இப்போது மண்ணிற்கு அடியில் எந்த அங்கங்களை டிகிரியின் கோணங்கள் வைத்து என் அலைபேசி கிரகித்துக்கொண்டதோ அந்த அங்கங்கள் எல்லாம் இப்போது புழு பூச்சியின் சிறுசிறு பற்களுக்கு இரையாகிப்போனது.

தசையினை ரசித்த கண்கள் இன்று அதற்கு அடியில் இருக்கும் ரத்தத்தையும், சீழையும் ரசிக்குமா அப்படி ரசித்தால் எப்படியிருக்கும் எனக்குள் இப்போதும் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது. அதுசரி எலும்புகள் பாதி வெளியே வந்த என் விரல்கள் இன்னும் என் இழந்த காதலை எண்ணித் தவிக்கிறன என்று அந்த தொடுதிரை தொலைபேசியிடம் சொல்லிவிடுகிறீர்களா?!

அடுத்த பகுதி - "நாம் அறிவாளி என்றும் முட்டாள் என்றும் நிர்ணயிக்க இங்கே யாரும் பிறக்கவில்லை.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #20

 

Next Story

வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தை... வீடியோ கால் பேசிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி... வெளிவந்த தகவல்! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

girl

 

துபாயில் வேலை பார்த்துவரும் தந்தையிடம் மகள் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாகத் துபாயில் கூலி வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவளான ஆர்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துவருகிறார். வெளி நாட்டிலிருக்கும் தனது தந்தையிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை பேசிக்கொண்டிருப்பது ஆர்த்தியின் வழக்கம். கரோனா ஊரடங்குக்குப் பின் தினசரி காலையில் நலம் விசாரித்து வந்திருக்கிறார்.


கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி காலையும் வழக்கம்போல தந்தையிடம் செல்போனில் சார்ஜ் போட்டவாறே வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில் ஆர்த்தியின் காதில் காயம் ஏற்பட்டதோடு, வெடித்த செல்போனின் துகள்கள் ஆர்த்தியின் இரண்டு கண்களிலும் பட துடிதுடித்துக் கதறினார்.

ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த குடியிருப்புகளிலுள்ள மக்கள் ஓடிவந்து அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்குப்பின், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சைக்குப்பின் அன்று இரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்த ஆர்த்திக்கு மீண்டும் நள்ளிரவில் கண்வலி அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலமாகத் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உறவினர்.

 

 


இதுகுறித்து ஆர்த்தியின் உறவினர் ஒருவரிடம் விசாரித்தோம், "சமீபத்தில் அரேபிய, வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு குறித்த பேச்சுகள் அடிபட்டுவருவதால் வீடியோ காலில் தந்தையிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஆர்த்தி. ஏப்ரல் 26 அன்று இரவு முழுவதும் மின்வெட்டு. செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்ததால் மறுநாள் ஒன்பது மணிக்கு கரண்ட் வந்ததும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆர்த்தி, அப்படியே சார்ஜ் போட்டபடியே தனது தந்தையிடம் பேசத்தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்போன் வெடித்து ஆர்த்தியின் முகத்தைச் சிதைத்து விட்டது...'' என்கிறார் வேதனையுடன்.

மிகக் குறுகிய காலத்தில் செல்போன் இளைய தலைமுறையின் மீது செலுத்திவரும் அதீத தாக்கம் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய இணைய வசதியுடனான செல்போனே பயன்படுகிறது. ஜூம் மீட்டிங்குகள், ஆபிஸில் அனைவரும் கூடிப்பேசும் வசதியை நிவர்த்தி செய்கிறது. செல்போன் வழங்கும் வசதிகளை அத்தனை எளிதாய்ப் பட்டியலிட்டுவிட முடியாது. அதேசமயம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக்கூடாது என்பது எளிய பாதுகாப்பு விதி.
 

http://onelink.to/nknapp



இரவெல்லாம் மின்வெட்டு செய்யப்பட்டிருந்ததும், பகலில் மின்சாரம் வந்ததும், வோல்டேஜ் ஏற்ற இறக்கமும் தந்தையுடன் பேசும் ஆர்வமும் ஒரு பெண்ணின் கண்களுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது. நமக்கென்ன ஆகப்போகிறது… என சார்ஜ் போட்டபடியே பேசுபவர்களே, கண்கள் மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம்... உஷார்!

 

 

Next Story

எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தொலைபேசியில் பேச்சு

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.
 

பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எடப்பாடி பழனிச்சாமியை ராமதாஸ் இன்று மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். 

 

Ramadoss



தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்தார். அதேநேரத்தில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது போதுமானதல்ல என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் ராமதாஸ் கூறினார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது மக்களிடையே கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவியாக இருக்கும் என்பதையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

ராமதாஸ் தெரிவித்த கருத்துகளை எடப்பாடி பழனிசாமி மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டார். அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.