Skip to main content

"பிள்ளைகளின் குற்றச்சாட்டுகளை தவிர்கக நினைக்கும் பெற்றோர் அதற்கு லஞ்சம்.." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #14

Body

உடைந்த கண்ணாடியில் பதியும் பிம்பங்கள் முழுமை பெறுவதில்லை அப்படித்தான் இருந்தது ஒரு இறப்பினை வலுக்கட்டாயமாய் சுமந்த அந்த குடும்பம். தடதடக்கும் ரயிலின் சப்தத்தைக் கேட்டாலே கதறும் அந்த சிறுவனின் நிலைதான் அந்தோ பரிதாபம். ஒரே வயிற்றில் பிறந்து தன்னோடு அழுது, சிரித்து, சண்டையிட்டு, பகிர்ந்துண்டு வாழ்ந்த சகோதரனின் இழப்பு குணாவை அந்தநிலைக்குத் தள்ளியிருந்தது என்பதை உணர முடிந்தது.  வாலிபத்தின் வாயிலில் நிற்கும் வயதுடையவன் அவனின் கண்களும், முகம் துறுதுறுப்பை இழந்திருந்தது. நண்பர் ஒருவரை சந்தித்து வர சென்ற போது அவரிடம் மெடிக்கல் கெளன்சிலிங் பெற காத்திருந்தவர்களிடம் என்னாயிற்று என்ற மிக நீண்ட கேள்வியோடுதான் அந்தம்மாவிடம் பேசினேன்.  எங்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இரண்டு ஆண் ஒரு பெண். பெரியவனுக்கும் இவனுக்கும் நாலு வயசு வித்தியாசம். படிச்சிகிட்டே அண்ணனும் தம்பியும் பார்ட்டைமில் வேலைக்கு போனாங்க. எங்க போனாலும் இரட்டைப் பிள்ளைங்க மாதிரி ஒண்ணாவே திரிவானுங்க. போன வருஷபிறப்புக்கு நண்பர்களோட வெளியே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனங்க திரும்பி இவன் மட்டும்தான் வந்தான். புதுவருடம் நண்பர்களுடன் செல்வதென்றால் அரட்டைகளோடு ஆபத்தும் இருக்கும் என்பதை அப்போது உணரவில்லை அவர்கள்?!

அதை விபத்துன்னு சொல்றதா இல்லை விதின்னு சொல்றதான்னு தெரியலை மேடம். அந்நிகழ்வை விவரித்தும் கனத்துப்போனது எனக்கு! வாய்வழியாக கேட்டதற்கே இப்படியென்றால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பவனின் மனநிலை எப்படியிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பெத்ததில் ஒண்ணை தாரை வார்த்திட்டேன் இவங்களையாவது ஜாக்கிரதையா பார்த்துக்கணுமே! அந்தம்மா பேச பேச அவன் கண்களில் இருந்து நீர் வெளியேறிக் கொண்டே இருந்தது. இப்படித்தாம்மா சிலநேரம் அழறான். வெறிச்சி பார்த்திட்டே இருக்கான். ஏறாத கோவில் இல்லை பாக்காத வைத்தியம் இல்லை, தெரிஞ்சவங்க சொல்லி இப்போ இங்க பார்க்கிறேன். படிக்கும் போது ஒரு வேலை பார்த்து தன் தேவைகளைத் தீர்த்துக்கொண்டு குடும்பத்திற்கு உதவியாக இருந்த அந்த இளைஞனின் ஒரு விநாடி விபரீதத்தால் இன்னும் எத்தனை வருடங்கள் வேதனைகளை அனுபவிக்கப் போகிறார்களோ இந்தக் குடும்பத்தினர். 

 

fhபெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் பிள்ளைகளின் அபரித வளர்ச்சி, தன் பிள்ளைகளும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெற வேண்டும் என்று மிகப்பெரிய பள்ளிகளில் சேர்ப்பது, அவர்கள் நினைத்தைவற்றை வாங்கித் தருவது என வறுமை தெரியாமலேயே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பிள்ளைகளும் இரண்டு நாட்கள் அழுதால் தாங்கள் கேட்பது கிடைத்துவிடும் என்ற மனநிலையில்தான் பெற்றோர்களை தேடுகிறார்கள். அதிலும் இரண்டுபேரும் வேலைக்குப் போயிடறீங்க, வாரக்கடைசியிலே எங்கேவாது கூட்டிப்போகச்சொன்னா ஒண்ணு பார்ட்டி இல்லைன்னா ஓவர் டைம்ன்னு ராத்திரியோட ராத்திரியா இந்த டேபிள் சேரைப் போல கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசிட்டு போறீங்க? அதுவும் நல்லாபடி, ஏன் இப்படி பண்றேன்னு திட்டு இல்லைன்னா அட்வைஸ் அக்கறையான அன்பை எங்களுக்குத் தர்றதேயில்லை பிள்ளைகளின் குற்றச்சாட்டுகளை தவிர்கக நினைக்கும் பெற்றோர் ஏதோவொரு வகையில் அதற்கு லஞ்சம் தருகிறார்கள். குழந்தையென்றால் இனிப்பு, பொம்மை, பெரியவர்கள் என்றால் கணிப்பொறியும், அலைபேசியும் கூடவே ஒரு டேட்டா கார்ட்டும் ஏம்மா பேசலைன்னு நாடியைப் பிடித்து கொஞ்சிய பிள்ளைகள் கூட இப்போது அப்பறம் பேசும்மா என்று திரைக்குள் தங்களை நுழைத்துக் கொள்கிறார்கள். அதற்கடுத்து வாகனங்கள்.

பிள்ளை இரண்டுநாளா அழறான் சாப்பிடலை நாம சம்பாரிக்கிறது எல்லாம் யாருக்கு அவனுக்குத்தானே சின்னப்பையன் அவன் வயசு பசங்க ஓட்டும் போது அவனுக்கும் ஆசையாத்தானே இருக்கும் ஜால்ஜாப்புகளுக்கு நடுவில் புதிய சிசி பைக், அப்பாவின் நேரம் இன்னும் வேலை கடன் என்னும் ஆக்டோபஸ்ஸால் அழிக்கப்படுவது மகனுக்குத் தேவையில்லை அவன் வேண்டிய பைக் கிடைத்துவிட்டது. நான்கே நாளில் அடிபட்டு வந்து ஆஸ்பத்திரியின் கட்டிலில்! நேரமில்லா பெற்றோர்கள் நேசமில்லா பிள்ளைகள் இப்படித்தான் நகர்கிறது நகர வாழ்க்கை.

புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறைந்துவிடும் என்று போட்டோகாரரைப் பார்த்தாலே தெரிந்து ஓடும் காலம் போய், விழாக்களில் ஒளிந்து கொண்டு சரியான முகம் தெரியாதபடி வெட்கப்பட்டு கொடுக்கப்பட்ட போஸ் வெற்றிகரமாக அலமாரியில் சட்டம் போட்டு வைக்கப்பட்டு இருந்தது. அழுக்கடைந்த ஸ்டியோவில் மங்கலான விளக்கொளியில் எண்ணெய் தோய்ந்த கண்ணாடியின் முன்பு தன் அழகை மேலும் மெரூகூட்ட கொஞ்சம் பவுடரும், பல் உடைந்த சீப்பில் ஸ்டைல் என்று பாதி முகம் தெரியாதபடி வாரிய கேசமும் அமெச்சூர் தனமான புகைப்படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வந்து விட்டது செல்பி....! புகைப்படம் என்றால் ஆணியடித்தாற் போல நின்றுகொண்டு, விரைப்பாய் சின்னசிரிப்பு கூட இல்லாமல் எடுத்த காலம் எல்லாம் போய் இன்றைய செல்பிக்களில் வாய் கோணியும், பெராலிக் அட்டாக்கோ என்று பயம் கொள்ளும் விதமாகத்தான் அரங்கேறுகின்றன. முதலில் விளையாட்டாய் வந்த பழக்கம் இப்போது பல இளம் உயிர்களுக்கு வினையாய்!
 

 

vகுணாவின் மன நிம்மதியையும், அவனின் சகோதரன் ராஜாவின் வாழ்க்கையையும் அழித்தது இந்த செல்பிதான். சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய கேமிரா மொபைல் போன்... அதுவே எமனாகவும் மாறியிருக்கிறது அவர்கள் வாழ்வில். நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடப் போனவன் மாம்பலம் ரயில் நிலையம் நோக்கி பயணிக்க, அதி மின்சார ரயிலில் விரைவுப் பயணம். நான்கைந்து நண்பர்களுடன் அரட்டை, பக்கத்தில் பருவப் பெண்கள், இது போதாதா டேய் நேத்து ஒரு படம் பார்த்தேன் இந்தமாதிரி டிரைன்லதான் ஒருத்தன் போறான் பாட்டு சீன். இரண்டு கையையும் பிடிச்சிட்கிட்டு அவன் கதவுக்கு வெளியே தலையை நீட்டி சரியான போஸ்டா?! அப்படியா?!

எடுத்தா அப்படியொரு செல்பி எடுக்கணும் திரில்லிங்கா...! எடுத்துடுவோம்....ராஜாவின் பேச்சிற்கு வேண்டான்னா அம்மாவுக்கு தெரிந்தா அவ்வளோதான் அலறிய தம்பியின் குரலில் இருந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து, நீ மட்டும் சொல்லாம இரு போதும். ராஜா தன் ஒருகையில் செல்பி மோடுக்கு மாற்றிவிட்டு இன்னொரு கையால் கம்பியைப் பிடித்துக்கொண்டு இப்படித்தானேடா என்ற வார்த்தையோடு பின்னால் சாய்தவன் ஒரு செல்பியின் கிளிக் முடிவதற்குள் எதிர்ப்பட்ட கம்பத்தில் அவனின் தலை இடித்து நிலைதடுமாறி பின்னாலே சரிந்திருக்கிறான். சொந்த சகோதரன் தலைசிதறி கண்முன்னே சாவதைக் கண்ட குணாவின் நிலைமை அந்த விநாடிகளின் கனத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. உசுப்பேற்றிய நண்பர்கள் ஒவ்வொன்றாய் கழண்டு கொள்ள, யாரோ வண்டியை நிறுத்தினார்கள். இரயில்வே போலீசுக்கு தகவல் சொன்னார்கள். 

தன்னிச்சையாய் குணாவின் கால்களும் அண்ணனை நோக்கி ஓடியது. அவன் அதுவாகிப்போயிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளவே குணாவிற்கு நேரம் பிடித்தது. அம்மா அண்ணா...தரையெல்லாம் ரத்தம் மண்டைக்குள்ளே இருந்து என்னென்னவோ ஓழுகி அய்யோ அலங்கோலமாய் மகனின் முகத்தில் அத்தனை கோராமை இவனுக்காக நான் ஜீரணிச்சிகிட்டேன் ஆனா குணா.... தாயின் பிதற்றல் ஒருவருடம் கடந்த நிலையில் இன்றும் மருத்துவத்தில் குணா. மன அழுத்தத்தில் பெற்றோர்கள். மெளனமாய் வெளியேறினேன். ஒரு செல்பி எடுத்துக்கலாமா என்று இடதுபக்கம் ஒரு குரல் பேய் துரத்தியதைப் போல ஓடினேன் நிற்காமல்.அடுத்த பகுதி - "இளவயதில் பொறாமை என்பது இயலாமையின் சகோதரனைப் போல.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #15

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்