Skip to main content

எம்.எல்.ஏ ஆன உடனே நேரா முதல்வராகிவிட்டார்! - முதல்வரை தெரியுமா?

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

ஹரியானா மாநிலத்தின் அரசியல், புதிய முதல்வரின் பின்னணி... குறித்த இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள் :

1. தமிழை இரண்டாம் அலுவல் மொழியாகக் கொண்டிருந்த வடமாநிலம்!

2. மாநிலத்தின் பாதி தொகுதிகள் குடும்பத்துக்கு, மீதிதான் கட்சிக்கு!

 

2014 ஹரியானா சட்டமன்ற தேர்தலில், தேர்தல் களத்தில் ஜாட் இன வாக்குகளோடு, தலித் வாக்குகளை குறிவைத்து தேர்தல் பணியாற்றினார் மனோகர் லால் கட்டார். அதோடு, அங்குள்ள மக்களிடம் மத உணர்வை அதிகப்படுத்தினார். இதனால் பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், தேசியவாத லோக்தளம் கட்சி 20 இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் பிறகட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால் ஹரியானா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி. யார் முதல்வர் என்கிற கேள்வி எழுந்தபோது, முதல்வர் பதவிக்கான ரேஸில் யாருமே இல்லாமல் இருந்தனர் ஒருவரை தவிர. அவர், மனோகர் லால் கட்டார். எம்.எல்.ஏவானதுமே முதல்வராகிவிட்டார்.
 

manohar lal khattar

மனோகர் லால் கட்டார்



ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோத்தக் மாவட்டத்தில் நிந்தனா கிராமத்தில் சாதாரண விவசாயியான ஹர்பன் லால் குடும்பத்தில் 1954 மே 5ந்தேதி பிறந்தவர் மனோகர் லால் கட்டார். பஞ்சாபில் உயர்சாதியான கட்டாரி சாதிப் பிரிவை சேர்ந்தவர். எண்ணிக்கையில் ஹரியானாவில் குறைந்த சதவிகிதத்தில் இருக்கும் சாதிப் பிரிவு. கட்டார் 10ஆம் வகுப்பு படித்து முடித்தபோது, அவரது குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளியது. காரணம், அப்போதுவரை அவரது குடும்பத்தில் யாரும் 10வது வரை படித்ததில்லை. அதன்பின் டெல்லி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். டெல்லியில் சிறிய அளவில் துணிக்கடை வைத்து நடத்திவந்தார் கட்டார். நெருக்கடி நிலையின் போது, தூய்மையான டெல்லி, குடிசையில்லா தலைநகரம் என பிரதமராக இருந்த இந்திராகாந்தி மகன் சஞ்ஜய் காந்தி எடுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கட்டார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். 1977ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து முழு நேர பணியாளராக பணியாற்றத் துவங்கினார். ஆர்.எஸ்.எஸ் முழு நேர பணியாளர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்கிற விதிப்படி திருமணம் செய்துகொள்ளாமல் முழு நேர இந்துத்துவா கொள்கைவாதியாக அமைப்பை வளர்க்கத் துவங்கினார்.


ஹரியானா, இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதால் அவரது பணி சுலபமாக இருந்தது. 1994ல் பாஜகவுக்கு அனுப்பப்பட்டார். 1998ல் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஹரியானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நரேந்திர மோடியை நியமித்திருந்தது பாஜக தலைமை. அப்போது  கட்டாரும் மோடியும் இணைந்து மாநிலத்தில் தேர்தல் பணியை கவனித்தனர். காஷ்மீர், ஜார்கண்ட் என பல மாநிலங்களில் பாஜகவின் பிரச்சார குழு தலைவராக இருந்துள்ளார் கட்காரியா. அதற்குக் காரணம், அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் அத்துப்படியானவர். இந்து மக்களிடம் எப்படி உணர்ச்சியை தூண்ட வேண்டும், தேர்தல் களத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என நன்கறிந்தவர். அதனாலேயே அவரை பல இடங்களுக்கு பாஜக பிரச்சார கமிட்டி குழு, இவரை பொறுப்பாளராக நியமிக்கும். 2000 முதல் 2014 வரை ஹரியானா மாநில பாஜகவின் பொதுச்செயலாளராக பதவிவகித்தார். 2014ல் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவரது தலைமையில் தான் தேர்தல் பணி நடைபெற்றது. கர்னால் என்கிற தொகுதியில் முதல் முறையாக கட்டார் களமிறங்கினார், வெற்றி பெற்றார். அதுவரை எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்காத கட்டார், முதல் முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றதுமே, முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார். 

 

 

manohar with modi



ஆரவல்லி மலைத்தொடர் என்பது ஹரியானாவில் முக்கியமானது. இந்த மலைத்தொடரின் பல பகுதிகளில் ரிசார்ட்களை கட்ட ரியல் எஸ்டேட் துறையினரும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் முடிவு செய்தன. இதற்காக 2500 ஏக்கர் வனத்தை வளர்ச்சி திட்டத்துக்காக என்கிற பெயரில் ஒதுக்க நடந்த முயற்சியை எதிர்த்து அரசாணை வெளியிட வைத்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நிர்வாக இடமாற்றம் என்கிற பெயரில் பந்தாடியது பெரும் சர்ச்சைக்கு ஆளாகியது. சுமார் 35 லட்சம் ஹெக்டர் விவசாய நிலம் உள்ளது ஹரியானாவில். அதில் 1.5 லட்சம் ஹெக்டர் அளவுக்கு நெல் பயிரிடுகிறார்கள் விவசாயிகள். ஏன் நெல்லை பயிரிடுகிறீர்கள், மக்காச்சோளம் பயிரிடுங்கள், தண்ணீரை சேமிக்க இதுதான் வழி எனச்சொல்லி விவசாயிகளை நிர்பந்தம் செய்துள்ளது மாநிலத்தை ஆளும் பாஜக. ஆசிரியர் நியமன ஊழல் போல், நீதிபதி நியமனத்திலும் பெரும் மோசடி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 2017ல் நீதித்துறையில் ஊழல், மோசடி விவகாரம் வெளியே வந்தது. 1 கோடி கொடுத்தால் நீதிபதியாக்குகிறேன் என பாஜகவை சேர்ந்த ஒரு தரகர் பேசும் ஆடியோ செய்தியாக வெளியாக இந்தியாவே அதிர்ச்சியடைந்தது. அதனை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றுவிட்டார் கட்டார். இத்தனையையும் மிஞ்சும் வகையில், யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தையும் செய்தது அந்த அரசு. நிர்வாண ஜெயின் சாமியாரை அழைத்துவந்து சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு மேலாக ஒரு வெள்ளி சிம்மாசனம் அமைத்து அதில் உட்காரவைத்து உரையாட வைத்து அழகு பார்த்தவர்கள் ஹரியானா மாநிலத்தை ஆளும் அரசியல்வாதிகள்.

தேரா சச்சா சவுதா என்கிற அமைப்பின் தலைவரான மாடர்ன் சாமியார் பாபா குர்மித் ராம், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆதரவு இருந்தாலும் அதில் தலித் மக்களின் ஆதரவு அதிகம். இவர் பாலியல் வழக்கில் கைதாகி, நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் பெரும் பதட்டம், துப்பாக்கி சூடு என நடைபெற்றது. இதனை அரசாங்கம் சரியாகக் கையாளாததால் 30 அப்பாவி மக்கள் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இத்தனைக்கும் இடையே இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் என்ற பேரை தற்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதில் பெருமிதம். இப்போதும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்த மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

 

dusyanth chautala

துஷ்யந்த்



நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் – பாஜக – தேசிய லோக் தளம் – ஜனநயாக ஜனதா கட்சி போன்றவை தனித்தனியாக போட்டியிட்டன. தேர்தல் முடிவில் பாஜக தனித்து 40 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 31 இ்டங்களில் வெற்றி பெற்றது. தேவிலால் பேரன் துஷ்யந்த் புதியதாக தொடங்கிய ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்த லோக்தளம் தற்போது ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற மீதியிடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள், மீதி 8 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்தனர். அடுத்த முதல்வர் போட்டியில் இருந்த கேப்டன் அபிமன்யுவும் தோற்றுள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்றதும் ஜனநாயக ஜனதா கட்சி துஷ்யந்துடன் கூட்டணி பேசியது. அந்தக் கட்சி ஆதரவுடன் மீண்டும் அரியணையில் ஏறி அமர்ந்துள்ளது பாஜக. துணை முதல்வர் பதவியை ஜனநாயக ஜனதா கட்சிக்கு தந்துள்ளது பாஜக.


ஹரியானாவின் முதல்வராக பாஜகவை சேர்ந்த மனோகர் லால் கட்டார், இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றுள்ளார். துஷ்யந்த் துணை முதல்வராகிவிட்டார். இதற்காக பாஜக தந்துள்ள உறுதிமொழிதான், பெரும் சர்ச்சைக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் உள்ள தனது தாத்தா மற்றும் தந்தையை விடுவிக்க சட்ட உதவி செய்ய வேண்டும், முதல் கட்டமாக தனது தந்தையை பரோலில் வெளியே கொண்டு வர வேண்டும் என கண்டிஷன் போட அதை உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளது பாஜக. முதல் கட்டமாக கூட்டணி முடிவான மறுநாளே, துஷ்யந்த் தந்தை பரோலில் பத்து நாள் வெளியே வந்துள்ளார். ஊழலை ஒழிக்கும் கட்சி என சொல்லிக்கொள்ளும் கட்சி ஊழல்வாதிகளை விடுதலை செய்யவைக்கவுள்ளது. ஹரியானாவை மதவாதக்கட்சியும், சாதியவாதக்கட்சியும் ஆளத்துவங்கியுள்ளார்கள். இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை காலம் நமக்குக் காட்டும். 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.