Skip to main content

கணவனின் காதலியைச் சந்தித்த மனைவி; நடந்த எதிர்பாராத திருப்பம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 46

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Detective-malathis-investigation-46

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், கணவனை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஒரு திருமணம் ஆகி வேலை பார்த்து கொண்டிருக்கும் பெண் நம்மிடம் புகார் அளிக்க வந்தார். தன்னுடைய கணவன் இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியூர் சென்றதிலிருந்து நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக சொன்னார். சாதாரணமாக தன்னுடைய கணவர் மிகவும் நல்ல மனிதர். குழந்தையையும் தன்னையும் நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் சமீப காலமாக தான் வித்தியாசமாக இருக்கிறார் என்று கண்காணித்து சொல்லுமாறு கேட்டு கொண்டார். 

அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்க  இப்பொழுது மீண்டும் மனைவி கர்ப்பமாக இருந்தார். எல்லா தகவல்களையும் பெற்றுக் கொண்டு கணவரை பின்தொடர ஆரம்பித்தோம். அலுவலகத்தில் வேறு ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா என்றும் முதலில் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதன் பிறகு அவரை தொடர்ந்ததில் எல்லாம் சரியாக இருப்பதாக தெரிந்தாலும் அவர் முகத்தில் மட்டும் ஒரு வித பயமும் குற்ற உணர்வும் இருந்தது. ஒரு 15 நாட்கள் கழித்து அலுவலக நேரத்தில் ஒரு காபி ஷாப்பில் ஒரு லேடியுடன் கைகோர்த்துக் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். மேலும், இருவரும் சேர்ந்து வெளியே சந்திப்பது என்று இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். அந்த பெண்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார் தவிர இவர் கொஞ்சம் தள்ளி தான் இருந்தார். இது எங்களுக்கு புதிராக இருந்தது. அந்த பெண்ணிற்கு தான் ஏதோ ஒரு தொந்தரவு இருப்பதாகவும் இவர் ஆதரவு மட்டுமே அளிப்பதாக இருந்தது. 

ஆனால் அந்த பெண்ணை பார்க்கும் போதும் தவறானவர் போலவும் தெரியவில்லை. அந்த பெண்ணை அடுத்து பின் தொடர்ந்ததில்  ஒரு நாள் நீதிமன்றத்திற்கு சென்று மியூச்சுவல் கன்சன்ட்டில் டைவர்ஸ் வாங்குவதை நேரில் பார்த்தோம். அதற்கு பின்னர், இந்த பெண் தான் விடாப்பிடியாக இவரை பிடித்து வைத்திருக்கிறார் என்று புரிந்தது. நாங்கள் உறுதி செய்த பின், எங்களிடம் புகார் அளித்த பெண்ணை கூப்பிட்டு விஷயத்தை சொன்னோம். உங்கள் கணவரும் பழகுவதை பார்த்தால் தப்பாக தெரியவில்லை. ஆனால் அந்த பெண் தான் உங்கள் கணவரை விடாமல் தொடர்பில் இருக்கிறார். அவரிடம் இதைப் பற்றி பேசுமாறு சொல்லி அனுப்பி வைத்தோம். நாங்கள் அதற்கிடையில் அந்த விவாகரத்து கொடுத்த அந்த கணவனை பின்தொடரவும் செய்தோம். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை என்று தெரிய வந்தது. 

கணவனிடம் வேறொரு நபர் சொல்லியதாக சொல்லி விஷயத்தை பற்றி கேட்டபோது அந்த கணவரும் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருப்பதினால் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தான் இவ்வளவு நாள் சொல்லாமல் தள்ளி போட்டிருந்தேன் என்று மெல்ல என்ன நடந்தது என்ற விஷயத்தை சொல்கிறார். அந்தப் பெண்ணைத்தான் ஒரு காலத்தில் காதலித்ததாகவும் ஆனால் அவள் பெற்றோர்கள் சம்மாதிக்காததால் அவளுக்கு வேறு ஒரு திருமணம் நடந்து விட்டது. அதன் பின் தொடர்பு இல்லை. ஆனால் இரண்டு மாதம் முன்பு ஆபீஸ் டூர்  போன பொழுதுதான் அந்த பெண்ணைச் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு பின்னர் எனக்கு குடும்பம் முக்கியம் என்று எவ்வளவோ சொன்னாலும் அவள் தன் கணவன் ரொம்ப கொடுமைப்படுத்துவதாக சொல்லி விவாகரத்து வாங்கிவிட்டு என்னுடைய துணை வேண்டும் என்று விடமால் தொடர ஆரம்பித்து விட்டாள் என்றார். இதைக் கணவர் எடுத்து சொல்லியவுடன் அந்தப் பெண் என்னை சந்தித்து இதுபோல தன் கணவன் எல்லா உண்மையும் சொல்லிவிட்டதாக சொன்னார். நான் அவரிடம் வேறு மூன்றாவது நபர் பேசுவதை விட நீங்களே அந்தப் பெண்ணிடம் குழந்தையுடன் போய் சந்தித்து நிலைமையை சொல்லி பேசுங்கள். அந்தப் பெண்ணும் மன உளைச்சலில் தான் இருக்கிறார் என்பதால் கடினமாக பேசாமல் நிலைமையை சொல்லி பொறுமையாக பேசுங்கள். கண்டிப்பாக புரிந்து கொள்வார். அந்தப் பெண்ணும் பார்க்க தவறாக தெரியவில்லை என்ற சொல்லி அனுப்பினோம். அதேபோல இருவரும் பேசியதில் அந்தக் காதலி புரிந்து கொண்டு தன்னால் இனிமேல் குடும்பத்தில் தொல்லை வராது என்று வெளியூர் சென்று விட்டதாக சொன்னார்.  பிரச்சனையும் சுமூகமாக முடிந்தது.