Skip to main content

கார் டிரைவரை நம்பி இளம்பெண் செய்த செயல்; நிஜமுகம் தெரிந்ததால் அதிர்ச்சி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு : 45

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
detective-malathis-investigation-45

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

டீன் ஏஜ் மானிட்டரிங்க்காக ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து என்னிடம் புகார் வந்தது. தன் மகள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறாள். மேலும், வீட்டில் அடிக்கடி பணம் நகை என்று தொலைந்து போகிறது. என்னவென்று கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். 

நாங்கள் முதலில் அந்தப் பெண்ணை தான் பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பெண் தனக்கென்று தனி ஓட்டுநர் என்று வைத்திருக்காமல் தானே காரை வெளியே ஓட்டி சென்று வருகிறாள். தினமும் காலேஜ் போய்விட்டு வருவதை கவனித்தோம். இப்படியே பின் தொடரும்போது ஒரு நாள் வெளியே போகும் வழியிலேயே காரை நிறுத்தி ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தோம். அவர்கள் பேசிய விதம் நண்பர்கள் போல இல்லாமல் அதைத் தாண்டி நெருக்கமாக இருந்தது. எனவே அடுத்து அந்த பெண்ணை விட்டுவிட்டு அந்த நபரை பின்தொடர ஆரம்பித்தோம். ஆனால், அந்த நபரோ இந்த பெண்ணை போல பணம் புழங்குபவராக இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார். 

பின் தொடர்ந்து பார்த்ததில் அவருக்கு ஒரு மனைவி குழந்தை இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். அவர்களுடன் ஒரு சின்ன வீட்டில் வசித்து வருகிறார். உடனேயே உறுதி செய்யாமல் கொஞ்சம் நாள் கழித்து நன்கு இருவரையும் கவனித்த பின்னரே தொடர்பு இருக்கிறது என்று உறுதி செய்து பின் பெற்றோர்களை அழைத்து விஷயத்தை சொன்னோம். ஆதாரங்களையும் புகைப்படங்களையும் காண்பித்ததும் உடனேயே ஆளை அடையாளம் கண்டனர். தங்கள் வீட்டில் முன்பு டிரைவராக வேலை பார்த்தார், ஆனால் அவரை நிப்பாட்டி விட்டோம் என்றும் அவர்களின் பெண்ணை பள்ளியில் படிக்கும் வரை கொண்டு சென்று விட்டது இந்த ஓட்டுநர் தான் என்று சொன்னாகள். 

இந்தப் பெண்ணுடன் தான் இவருக்கு தொடர்பு இருக்கிறது என்று புரிய வைத்து அந்த டிரைவரை நிப்பாட்டிய பின்பும் இவன் தொடர்ந்து பாலோ செய்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறான்.  நீங்கள் பெண்ணிற்காக கொடுக்கும் பணமும் வீட்டில் இருக்கும் நகையும் எல்லாம் இவரிடம் தான் சென்றிருக்கிறது என்று சொன்னோம். அந்த டிரைவருக்கு திருமணம் ஆனதை பெற்றோர்கள் தாங்கள் சொன்னால் நம்ப மாட்டாள். வேண்டுமென்றே நாங்கள், ஏழை குடும்பம் என்பதால் மறுக்கிறோம் என்று தான் எடுத்துக் கொள்வாள். அதனால், நீங்களே சொல்லி புரிய வையுங்கள் என்று பெண்ணை அழைத்து வந்தனர். அந்தப் பெண்ணிடம் நாங்கள் எடுத்துச் சொல்லும் போது அவள் கொஞ்சமும் நம்பவே இல்லை. எனவே அவளை அழைத்துக் கொண்டு அந்த நபரின் வீட்டில் ஆள் இல்லாத பொழுது காண்பித்து திருமணம் ஆன போட்டோ எல்லாம் பார்த்து அந்த நபரின் மனைவியிடமும் அந்தப் பெண்ணை சாதாரணமாக பேச வைக்கவும் தான் நம்பினாள். ரிப்போர்ட்டை அந்தக் குடும்பத்திடம் கொடுத்து அனுப்பினோம்.

சிறிது நாட்கள் தொந்தரவு செய்யாமல் தனிமையில் விட்ட பின்பு, அந்தப் பெண் தன் தவறுகளை புரிந்து பெற்றோரிடம் அந்த நபருக்கு கேட்கும்போதெல்லாம் தான் தான் நம்பி பணம் கொடுத்ததை உண்மை எல்லாம் சொல்லி ஒப்புக் கொண்டாள். அதன் பிறகு, அவளுக்கு வேறு இடத்தில்  திருமணம் பார்த்து கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. இருந்தாலும் பெற்றோர்கள் பெண் பாதுகாப்பை எண்ணி அவ்வப்போது என்னிடம்  அந்தப் பெண்ணை பார்த்துக்கொள்ள சொல்வார்கள்.