Skip to main content

வீட்டுக்குத் தெரியாமல் வேறு பிளாட்டுக்கு போகும் பெண்; காத்திருந்த அதிர்ச்சி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 41

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
detective-malathis-investigation-41

தான் கையாண்ட துப்பறியும் வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன் மகள் வீட்டிற்கே வருவதில்லை என்று பெற்றோர் அளித்த புகாரில் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்களைப் பற்றி விவரிக்கிறார்..

ஒருமுறை பெண்ணை பெற்றவர்கள் என்னிடம் கேஸ் குடுக்க வந்திருந்தார்கள். எங்கள் பெண் வீட்டிற்கும் வருவதில்லை, திருமண ஏற்பாட்டிற்கும் ஒத்துக்கொள்வதில்லை, வேறு யாரும் பார்த்து வைத்திருக்கிறாயா என்றாலும் பதில் இல்லை. அடிக்கடி தோழி, நண்பர்கள் வீட்டிற்கு சென்று தங்கி வருவதாக வேறு சென்று விடுகிறாள் என்று சொன்னார்கள். மூன்று, நான்கு நாளுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருகிறாள் என்றனர். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்தோம். 

அந்த பெண் அலுவலகம் சென்று மாலை வீடு திரும்புவதற்கு பதிலாக வேறொரு பிளாட்டிற்கு செல்கிறாள். அங்கே வெளியே நாங்கள் காத்திருக்க, நேரம் ஆக ஆக வரவில்லை இரவும் தாண்டியது. ஆனால் காலையில் வேறொரு உடையில் சாதாரணமாக மீண்டும் அலுவலகம் செல்கிறாள். அப்போது அங்கு அவளது உடைகள் பொருட்கள் வைத்து புழங்கும் அளவிற்கு நெருக்கமான வீடு என்று தெரிய வந்தது. தொடர்ந்து கண்காணித்ததில் அவள் அடுத்த நாள் ஒரு ஆணுடன் வெளியே செல்கிறாள். இருவரும் ஒன்றாக வெளியே சுற்றுவது, ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது என்று இருக்கிறார்கள். அந்த நபரோ கொஞ்சம் அந்த பெண்ணை விட வயதில் பெரியவராக இருக்கிறார்.

அந்த பெண்ணை ஒருவரும், கூட பழகும் அந்த நபரையும் என்று தனி தனியாக ஆள் வைத்து பின்தொடர்ந்தோம். பார்த்ததில் அந்த நபர், இந்த பெண் மூன்று நாள் கழித்து பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கும் சமயம், வேறொரு புது பெண்ணுடன் அலுவலகத்திலிருந்து வருகிறார். ஆனால் அந்த பெண் இவர் வீட்டிற்கு வரவில்லை. அவரை மேலும் பின்தொடர்ந்ததில் இன்னொரு அதிர்ச்சி. வார இறுதியில் அவர் பஸ் ஏறி ஊருக்கு செல்கிறார். பார்த்தால் அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள், குடும்பம் என்று இருக்கிறது. பின்னர் சேகரித்த தகவல்கள், போட்டோஸ் என்று அனைத்தையும் அந்த பெண்ணின் பெற்றோரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னோம். அவர்கள் அதிர்ந்து அவரைப் பற்றி என் பெண்ணிடம் சொன்னாள் நம்பமாட்டாளே மேடம் என்று கவலைப் பட்டனர்.

பெண்ணை அழைத்து வாருங்கள் நான் எடுத்து சொல்கிறேன் என்றேன். அவளிடம் ரிப்போர்ட்ஸ் மற்றும் ஆதாரங்களை காட்டியதும், எல்லாவற்றையும் கேட்ட பின் குறிப்பாக அவருக்கு திருமணம் ஆகி குடும்பம் இருப்பதை சொன்னவுடன் ஷாக் ஆகவில்லை. அது தனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஆனால் அவர் விவாகரத்து செய்த பின்னர் தாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதுவரை லிவிங் டுகெதரில் இருப்பதாக சொன்னாள். ஆனால் அவர் இது மட்டுமில்லாமல் இன்னொரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கிறார் என்ற தகவலே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெற்றோருடன் சேர்ந்து சென்ற அந்த பெண் எங்களுக்கு தெரிந்து தெளிவான முடிவே எடுப்பாள் என நம்புகிறோம். நிறைய பேர் எங்களிடம் வந்து இது போன்று விவாகரத்து பதிவு செய்திருக்கிறார் என்று இரண்டாவது திருமணம் பண்ணிக்கொள்ளலாமா என்று கேட்கின்றனர். சட்டப்படி விவாகரத்து சர்டிபிகேட் கோர்ட்டிலிருந்து வராதவரை திருமணம் செய்யக்கூடாது. மனைவி அல்லது கணவர் இருக்கும்போதே இன்னொரு குடும்பத்துடன் வாழ்வது என்பது குற்றமாக கருதப்படும். மேலும் பைகாமி ஆக்ட் மூலம் அவர் கைது செய்யப்படுவார். இது குறித்து மக்களிடையே கண்டிப்பாக விழிப்புணர்வு இருக்க வேண்டும்.