Skip to main content

அம்மா வீட்டிற்கு அடிக்கடி பயணம்; இரவில் வீடியோ கால் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 32

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 detective-malathis-investigation-32

 

மாதம் ஒரு முறை அம்மா வீட்டிற்கு போய் ஆகவேண்டும் என்று அடம்பிடித்த பெண்ணின் காரணத்தை கண்டறிந்த விதம் பற்றி முதல் பெண் துப்பறியும் நிபுணர் மாலதி நம்மிடையே விவரிக்கிறார்.

 

திருமணமான ஒரு ஆணும், அவரது அப்பாவும் நம்மிடம் ஒரு விசயத்தை கண்டறிந்து தருமாறு வந்தார்கள். தன்னுடய மனைவி மாதம் ஒரு நான்கு நாட்களுக்கு அம்மா வீட்டிற்கு போய்விடுகிறாள். என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். அம்மா வீட்டிற்கு சாதாரணமாக போகும் பெண்ணை ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேட்டால் இது தொடர்ச்சியாக கல்யாணம் ஆன காலத்திலிருந்து நடக்கிறது. அதனால் காரணம் தெரிய வேண்டும் என்றார்கள்.

 

நாமும் புலனாய்வு செய்ய ஆரம்பித்தோம், அம்மா வீட்டிற்கு செல்ல அந்த பெண்ணோ மாதவிடாயை காரணமாக சொல்லி இருக்கிறாள். ஆனால் அம்மா வீட்டிற்கு போகிறவள், வீட்டில் தங்குவதில்லை ஒரு ஆண் நண்பரை அடிக்கடி சந்திக்கிறாள். அவரோடு சண்டையிடுகிறாள். அவருக்காக நகையை அடகு வைத்து பணம் தருகிறாள். இவை அனைத்தையும் நமது புலனாய்வு வழியாக கண்டறிந்து ரிப்போர்ட்டை அவரது கணவரிடம் கொடுத்தோம்.

 

அந்த பெண்ணோ அந்த ஆண் நண்பர் தனது அண்ணன் என்றார். பிறகு ஏன் இரவில் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசுகிறாய் என்றதற்கு அப்போதுதான் அவர் நைட் சிப்ட் வேலையில் இருப்பார் என்றாள். பிறகு இன்னும் தீவிரமாக விசாரித்ததில், வீடியோ காலில் பேசும்போதே அதை படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறான். அதனால் அவனிடமிருந்து விலக நகையை அடகு வைத்து பணம் தந்திருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டறிந்தோம். அவளும் ஒப்புக்கொண்டாள்.

 

பிறகு காவல்துறை உதவியோடு அந்த அண்ணன் என்ற ஆண் நண்பரை அழைத்து கண்டித்து அவர் வைத்திருந்த படங்களை அழித்து பெண்ணின் கணவரிடம் எடுத்துச் சொன்னோம். அவரும் அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொண்டார். துப்பறியும்போது நம்மால் சுமுகமாக முடித்து வைக்கிற அளவிற்குத்தான் வேலை செய்வோம். நம்மால் முடியாத பட்சத்தில் நாம் காவல்துறையின் உதவியை நாடுவோம் என்பதையும் தெரியப்படுத்தி விடுவோம்.


 

Next Story

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 'கொடநாடு பங்களா'- நீதிமன்றம் அனுமதி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
'Kodanadu Bungalow' under scrutiny - Court

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையில் இருக்கக்கூடிய மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர்.

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர் கடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் ஏற்கெனவே கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட பங்களாவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இருக்கக் கூடிய தடயங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.