Skip to main content

மனைவியின் தகாத உறவு; தனிமையில் தவித்த கணவன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 03

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Detective Malathi's Investigation : 03

 

தன்னுடைய உளவுப் பணியில் தான் சந்தித்த பல்வேறு விசித்திரமான வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

 

தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று கணவர் எங்களிடம் புகார் கொடுத்தார். ஒரு அரசுப் பள்ளியில் தான் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். அங்குதான் தன் மனைவி பணியாற்றி வந்ததாகச் சொன்னார். கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு நாங்கள் சென்றோம். வண்டியில் வந்த அந்தப் பெண் திடீரென்று காணாமல் போனார். அவருக்காக நீண்ட நேரம் நாங்கள் அங்கு காத்திருந்தோம். ஒருகட்டத்தில் நீண்ட நேரம் அங்கு நிற்க முடியாது என்பதால் கிளம்பினோம். 

 

அடுத்தடுத்த நாட்களிலும் அந்தப் பெண் எங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருந்தார். அவரைப் பிடிப்பது கடினமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களைப் பயன்படுத்தி ஒருவழியாக அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்தோம். வீட்டில் குழந்தை இருந்தது. 27 வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தையைப் பராமரித்து வந்தான். இந்தப் பெண் தொடர்ந்து பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தாள். அவளுடைய கணவருக்குத் தெரியாமல் இது நடந்தது.

 

கணவருக்கு அவருடைய மனைவி மேல் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், அது சின்ன பையனாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், மீண்டும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழவே அவர் விரும்பினார். போலீஸ் மூலம் அந்தப் பெண் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள். ஆனால், திரும்பவும் அந்தப் பையனுடன் சென்றாள். இதனால் குழந்தையை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்று அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பையனுடன் சென்றுவிட்டாள் அந்தப் பெண்.

 

எங்களுடைய பணி மிகவும் கடினமான ஒன்றுதான். பல நேரங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். சில நேரங்களில் கெட்டப் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஹேக்கிங் என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை நாம் செய்வதில்லை. எங்களுடைய பணியின்போது சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். முடிந்தவரை பிரச்சனைகளை வீட்டிலேயே பேசித் தீர்த்துக்கொள்வது சிறந்தது.

 

 

 

Next Story

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

2 வயது குழந்தையைக் கால்வாயில் வீசி கொன்ற தந்தை; விசாரணையில் பரபரப்பு தகவல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Father did 2-year-old by throwing him into canal in UP

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலேமான். இவருடைய இரண்டு வயது மகள் காணவில்லை என்று கடந்த 14ஆம் தேதி சர்தானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சுலேமான் தனது மகளுடன் செல்வது பதிவாகியிருந்தது. அதன் பின்னர், இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுலேமானின் 2 குழந்தைகள் இதே போல் மர்மமான முறையில் காணாமல் போனதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். 

இதனால், சுலேமான் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சுலேமானின் 2 வயது பெண் குழந்தையும், மகனும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுலேமான், தனது மகளை தனியாக அழைத்து வந்து அருகே உள்ள கால்வாயில் வீசியதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சுலேமான் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் 2 குழந்தைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்வாயில் வீசி கொல்லப்பட்ட குழந்தையின் உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.