Skip to main content

உடலுறவில் கணவன் நடந்துகொண்ட விதம்; மாமியாரின் திருட்டால் கதறிய பெண் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 83

Published on 20/09/2024 | Edited on 20/09/2024
advocate santhakumaris valakku en 83

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சப்னம் என்ற பெண்ணுடைய வழக்கு இது. கோவாவில் பிறந்த இவருடைய அம்மா, சிறிய வயதாக இருக்கும்போதே இறந்துவிடுகிறார். இவருடைய அப்பா தான், சப்னத்துக்கு 82 பவுன் தங்க நகை போட்டு திருமணம் செய்து வைக்கிறார். திருமணம் ஆன இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மருமகளிடம் இருந்த நகைகளை வாங்கி தன்னுடைய லாக்கர் அக்கெளண்டில் மாமியார் வைத்துக் கொள்கிறார். கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். கேசினோவில் பணத்தை வைத்து சூதாடும் பழக்கம் கொண்ட சப்னத்தினுடைய மாமியார், ஒவ்வொரு நகையாக எடுத்து அடகு வைத்து அந்த பணத்தை கொண்டு யாருக்கும் தெரியாமல் சூதாடி வந்துள்ளார். 

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நகைகளை சப்னம் கேட்டபோது கூட, சாவி தொலைந்துவிட்டதாகக் கூறி சப்னத்தை மாமியார் சமாளித்துவிடுகிறார். இதற்கிடையில், பையனுக்கு கனடாவில் வேலை கிடைக்க, சப்னம் அங்கு ஒரு வேலை தேடிக்கொண்டு இருவரும் அங்கு செல்கிறார்கள். செல்லும் முன்பு கூட நகைகளை கேட்டால் கூட, மாமியார் ஏதோ ஒன்றை சொல்லி வேறு சாவியை கொடுக்கிறார். அந்த சாவியைக் கொண்டு பேங்க் லாக்கரில் போட்டு பார்த்து எதுவும் வேலைக்கு ஆகாததால், சப்னமும் இதை சரி என்று விட்டுவிட்டு கனடாவுக்கு சென்றுவிடுகிறார். அங்கு சென்ற பின் தான், கணவன் சரியான கஞ்சன் என்று சப்னத்துக்கு தெரியவருகிறது. சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, பொருள்களை கூட குறைவாக தான் வாங்குகிறான். பழைய சரியில்லாத கட்டிலை வாங்கியிருப்பதால் சப்னத்துக்கு முதுகு வலி வந்து மருத்துவமனை வரை செல்கிறாள். இதற்கிடையில், சப்னம் கர்ப்பமானதால் மருத்துவரின் அறிவுரையின்படி, புதிய கட்டில் ஒன்றை வாங்குகிறான். கர்ப்பமான அவளை, எங்கு கூட்டி போனாலும் நடக்க வைத்தே கூட்டி போவான். அதன் பின்னர், அரசு மருத்துவமனையில் சப்னத்துக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தேவையான தொட்டில் கூட வாங்காமல், கம்பளியை வாங்கி கீழே படுக்க வைக்கிறான். கனடா போன்ற நாட்டில் கார் என்பது அவசியமான ஒன்றாகும். காய்கறி வாங்க வேண்டுமென்றால் கூட, குழந்தையை ட்ராலியில் தூக்கி கொண்டு 2,3 கி.மீ தூரம் நடந்தே தான் வாங்கி வருவாள். 

சப்னத்தினுடைய அப்பாவும் கனடாவுக்கு சென்று மகளை பார்த்து தேவையான பொருள்களை வாங்கிகொடுத்துவிட்டு வருத்தப்பட்டு தான் இங்கு வருகிறார். இதற்கிடையில், சப்னம் ஒரு வேலைக்குச் செல்கிறாள். கனடா போன்ற நாடுகளில் மாலை 4 மணிக்கெல்லாம் இருட்டாகி குளிர ஆரம்பித்துவிடும். வேலை முடிந்ததும் கார் இல்லாததால், அந்த குளிரில் குழந்தையை டிராலியில் தள்ளிக்கொண்டு நடந்து வீட்டுக்கு வருவாள். இதனால், சில நேரங்களில் ரோட்டில் செல்லும் சில பேர் சப்னத்தின் நிலைமையை கண்டு லிப்ட் கூட கொடுப்பார்கள். கார் வாங்காததால், இருவருக்கும் வாக்குவாதம் ஆகி முரண்பாடுகள் வர ஆரம்பிக்கிறது. குழந்தை பிறந்து 1 வருடம் ஆன பிறகு, இவர்களுக்குள் உடலுறவு என்று வரும்போது சப்னத்திடம் அந்த பையன் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறான். இதனால், அவளுக்கு தொடர்ச்சியாக பிலீடிங் ஆகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் பையன் மருத்துவமனைக்கு வருகிறான். கனடாவில் இந்த விஷயம் செக்ஸுவல் குரூயல்டி, அதனால் இப்படி மோசமாக நடந்துகொள்ளக் கூடாது என்று மருத்துவர் பையனை கண்டித்ததற்கு பின்னால் திருந்துவிடுவான் என்று நினைத்தாலும் கூட, அதே மாதிரி தான் நடந்துகொள்கிறான். திருமணம் ஆன புதிதில் இருந்த ஈர்ப்பு கொஞ்ச கொஞ்சமாக குறைந்து, மனைவி மற்றும் குழந்தையை தேவையில்லாத சுமையாக நினைக்கிறான். 

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்ளும் ஒரு ஆணிடம் வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று உணர்ந்த சப்னம், அங்கிருந்து குழந்தையை கூட்டிக்கொண்டு இங்கு வருகிறாள். மகளை சமாதானம் படுத்திய சில நாட்களுக்கு பிறகு, சப்னத்தை மாமியார் வீட்டுக்கு அவளுடைய அப்பா அழைத்துச் சென்று நகைகளை திரும்பக் கேட்கிறார். ஆனால், சப்னம் தான் அந்த நகைகளை எடுத்துக்கொண்டதாக மாமியார் எக்குதப்பாக பதில் சொல்கிறார். அதன் பிறகு, இவர்கள் கோவாவுக்கு திரும்பி வந்த பின், குழந்தையை தனது சித்தியிடம் ஒப்படைத்துவிட்டு, நல்ல வேலை கிடைத்த சென்னைக்கு செல்கிறாள். அவள் வேலை செய்யும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுவதற்காக நான் சென்றிருந்தேன். பெண்களுக்கான வன்முறைகளை தடுப்பதற்கான சட்டங்கள் குறித்து நான் பேசுவதை கண்ட அவள், என்னிடம் போன் நம்பரை வாங்கி என்னை சந்தித்து விஷயத்தை சொன்னாள். நகைகளை வாங்கிய பில், திருமணத்தின் போது நகைகளை மாமியாரிடம் கொடுத்த போது எடுத்த போட்டோ, நகைகளை சப்னம் ஏற்கெனவே அணிந்திருந்த போட்டோ ஆகியவற்றை இணைத்து நகைகளை கொடுக்காமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பையனுடைய அம்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த அம்மா எந்த பதிலும் கொடுக்காததால், போலீசில் இதுகுறித்து கம்ப்ளைண்ட் கொடுத்தோம். அதன் பின், இரண்டு போலீஸார், வழக்கறிஞர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து கோவாவில் இருக்கும் அந்த அம்மா வீட்டுக்கு சென்று அந்த அம்மாவை போலீஸ் ஸ்டேசனில் அழைத்து வந்து விசாரித்தோம்.

அதன் பிறகு, கனடாவில் உள்ள பையனில் அறிவுரையால் 3 மாதத்திற்குள் நகைகளை திரும்ப கொடுப்பதாக அந்த அம்மா எழுதிக் கொடுத்தார். அதன் பின்னர், பையனுக்கு டைவர்ஸ் கேட்டும், அம்மாவும் பையனும் சேர்ந்து இந்த திருட்டு வேலையை செய்ததாக ஒரு கேஸ் போட்டு பெட்டிசன் காப்பியை அவனுக்கு அனுப்பினோம். உடனே, அங்கிருந்து சப்னத்துக்கு போட்டு சமாதானப்படுத்தினாலும், நகைகளை கொடுக்க வேண்டும் என்று சப்னம் தீர்க்கமாக இருந்தாள். இதையடுத்து, போலீஸும் அவனுக்கு போன் போட்டு இங்கு வருமாறு கண்டித்தார்கள். ஆனால், அவன் வராமல் மூன்று, நான்கு மாதம் வரை காலத்தை தாழ்த்தினான். அந்த அம்மாவை கைது செய்துவிடுவோம் என்று சொன்ன பிறகு, பையன் இங்கு வந்து 50 பவுன் நகைக்கான பணத்தை கொடுத்தான். கணவனோடு டைவர்ஸ் வாங்குவதாகவும், மீதமுள்ள 32 பவுன் நகைக்கான குழந்தையின் பேரில் போட்டு வைக்க வேண்டும் என்று சப்னம் கூறியதன் பேரில் நாங்கள் மனு போட்டோம்.  நகைக்கான பணத்தை கொடுத்த பிறகு, இவர்கள் இருவருக்கும் மீயுட்ச்சுவல் கன்செண்டில் விவகாரத்து ஆனது.