Skip to main content

“தொட்டதுக்கெல்லாம் மிரட்டிய மனைவி; இறுதியில் ஏற்பட்ட முடிவு” - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 42

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

advocate-santhakumaris-valakku-en-42

 

எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிற பெண்ணிடமிருந்து டைவர்ஸ் பெற்ற ஒருவரது வழக்கு குறித்து குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே விவரிக்கிறார்.

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குகநாதன் என்பவருடைய வழக்கு இது. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு பெண்ணின் புரொபைல் வந்து, நிச்சயித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே பெண் டயாப்பட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். இதை மாப்பிள்ளைக்கு தெரிவித்தும், எல்லாருக்கும் இயல்பாக வருவது தானே என்றிருந்திருக்கிறார்.

 

திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு நான்குமுறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். இதன் தீவிரத்தன்மை தெரிய வந்ததும் குகநாதன், தன் அக்காவிடம் சொல்லி மருத்துவரை பார்க்க தன் மனைவியை அழைத்திருக்கிறார். அந்த பெண்ணோ “ஏன், இதையெல்லாம் உங்க அக்காவிடம் சொன்ன”? என்று சண்டையிட்டு இருக்கிறாள்.

 

சென்னையில் தங்கி திருவள்ளூரில் வேலை செய்து வருகிற குகநாதனுக்கு, மாலை வந்ததும் அசதியில் படுத்துவிடுவார். ஆனால் வெளியே எங்கேயாவது கூட்டிப்போகுமாறு சண்டையிடுவாள், வார இறுதி நாளில் கூட்டிப்போகிறேன் என்று சொன்னால் அதற்கும் சமாதானம் ஆகாமல் தினமும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள். சில சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருப்பது, இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து மயக்கநிலைக்கு செல்வதெல்லாம் இருந்திருக்கிறது.

 

அந்த பெண் ஒரு நாள், குகநாதனின் போனை எடுத்துப் பார்த்த போது தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு வெகுநாட்களுக்கு முந்தைய வாட்ஸ் அப் சேட் எடுத்துப் பார்த்து, அந்த பெண்ணோடு தொடர்பாக இருக்குறியா என்று சந்தேகப்பட்டு சண்டையிட்டு இருக்கிறாள். அது பழைய தொடர்பு, இப்போது தொடர்பில்லை என்று சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகாமல் சண்டையிட்டு இருக்கிறாள்.

 

இப்படி அடிக்கடி சண்டையிடுவதையே வழக்கமாக வைத்திருப்பதால், மனம் நொந்து போன குகநாதன், தனது அக்கா மகனோடு ஊட்டிக்கு ஒரு சுற்றுலா சென்றிருந்திருக்கிறார். அதை தெரிந்து கொண்டு இப்போ உடனடியாக சென்னைக்கு வராவிட்டால், நான் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு சாப்பிடாமல், இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து விடுவேன். எனக்கு எதாவது ஒன்று ஆனால் அதற்கு நீ தான் பொறுப்பு என்பதையும் எழுதி வைத்துவிட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். அவரும் ஊட்டியிலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து அவளை காப்பாற்றியிருக்கிறார்.

 

கொஞ்ச நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போ என்று அனுப்பி வைத்து விட்டு வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது சாப்பிட கடைக்கு போய் உணவு பார்சல் வாங்கி வந்திருக்கிறார். இதை ஒரு தகவலாக அந்த வீட்டின் வாட்ச் மேன் அந்த பெண்ணுக்கு போனில் சொல்லி இருக்கிறார். உடனே வீட்டிற்கு வந்து நீ வீட்டிற்குள் வேறு பெண்ணோடு இருக்கிறாய் என்று சண்டையிட்டு கதவை திறக்கச்சொல்லி சண்டையிட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியான மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளானதால் டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

 

பெண் வீட்டின் தரப்பிலிருந்து இவர் மீது கொலை மிரட்டல் செய்தார், திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். முன் ஜாமீன் வாங்கி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்காடி குகநாதனுக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுத்தோம். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த, சாதாரண பணியில், சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்த குகநாதனுக்கு பெரிய தொகையினை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று பெண் தரப்பில் சொல்லப்பட்டது. நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று கடன் வாங்கி அந்த தொகையை தந்து இப்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்.

 

 

 

Next Story

மகளின் திருமண வாழ்க்கையை கெடுத்த பெற்றோர்; தவித்த கணவர் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 45

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
 advocate-santhakumaris-valakku-en-45

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

அழகேசன் என்பவரின் வழக்கு இது. அவர் இராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிகிறவரார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவருக்கு பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் ஆனதும் பெண்ணை இராணுவத்தில் தான் பணிபுரிகிற இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். இல்லற வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு சான்றாக ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு அம்மா வீட்டில் சென்று அந்த பெண் தங்கி இருக்கிறார். பிறகு அழகேசன் சென்று தன்னுடைய இடத்திற்கே கூட்டி வந்து விடுகிறார். இராணுவ குடியிருப்பு பகுதியில் குளிர் அதிகமாக வரும் சீசனில் குழந்தையை வைத்துக் கொள்ள அந்த பெண் கஷ்டப்படுகிறாள். தன்னுடைய பெற்றோரை வரவழைத்து மீண்டும் ஊருக்கு வந்துவிடுகிறாள்.

குளிர் சீசன் முடிந்ததும் இராணுவத்திலிருந்து வந்து தன்னோடு வருமாறு அழைத்தால் அந்த பெண்ணோ வர மறுக்கிறாள். ஒரு சில சமயம் அவமரியாதையாகவும் அவரை நடத்துகிறாள். தொடர்ச்சியாக அந்த பெண்ணை அவளது வீட்டிற்கு சென்று அழைக்கிறார், ஆனால் வர மறுத்து அழகேசன் தருகிற பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறாள். அதே சமயத்தில் தன்னுடைய கணவர் தனக்கு பராமரிப்பு தொகை தரவில்லை என்றும் இராணுவத்திற்கு பொய்யாக ஒரு புகார் கடிதம் அனுப்புகிறாள்.   

அந்த புகாரோடு விடாமல் என் கணவரின் தந்தையும் இராணுவத்தில் இருந்திருக்கிறார், அவருக்காக கொடுக்கப்பட்ட இடத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாது அதற்கு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தையும் இராணுவத்திற்கு அனுப்பி வைக்கிறாள். இதை விசாரித்த இராணுவ உயர் அதிகாரிகள் உன் மனைவிக்கு என்ன தான் பிரச்சனையோ அதை சரி செய்து விட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்கள்.

சேர்ந்து வாழலாம் வா என்றால் வர மாட்டேங்கிறாள். ஆனால் பராமரிப்பு தொகை மட்டும் வேண்டும் என்கிறாள், என்ன செய்யலாம் என்று சட்ட உதவியை நாடினார் அழகேசன். இது குடும்ப நல வழக்காகும், இராணுவத்தில் பணிபுரிகிறவர் அடிக்கடி குடும்ப நல நீதிமன்றத்திற்கு வர வாய்ப்பில்லை என்பதை நீதிமன்றத்தில் சொன்னோம். அத்தோடு சேர்ந்து வாழ்த்தான் அழகேசன் கேட்கிறார், அதனால் பெண் வீட்டிலிருக்கும் அழகேசனின் மனைவியை அவருடன் அனுப்பி வையுங்கள் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். அந்த பெண்ணும் சம்மதித்தாள்.

ஆனால் இராணுவ குடியிருப்புக்கு போகவில்லை, தமிழ்நாட்டில் உள்ள அழகேசனின் அம்மாவோடு கொஞ்ச நாளைக்கு இருந்தாள், அழகேசனின் அம்மா உடல்நிலை சரியில்லாத சமயம், அவரை ஒழுங்காக அழகேசனின் மனைவி பார்த்துக் கொள்ளாமல் அடிக்கடி அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறாள். ஒரு சமயத்தில் அழகேசனின் அம்மா இறந்து விடுகிறார்.

அதற்கு மேல் பொறுத்துப் போக முடியாத அழகேசன், டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணினார், அந்த பெண் கேட்ட பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க முடியவில்லை. இவரால் முடிந்த தொகையையும், குழந்தைக்கு பேங்கில் டெபாசிட் தொகையும் போட்டு வைத்து டைவர்ஸ் கொடுக்கப்பட்டது, இருவரும் பிரிந்தார்கள். செல்லமாக ஒரே பெண்ணை பெற்றதால் மருமகனோடு அனுப்பி வாழ வைக்காமல் அவளது வாழ்க்கையை கெடுத்ததாக உறவுகள் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் புரிந்தது மாதிரி தெரியவேயில்லை. இப்பொழுது அழகேசன் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தான் இருக்கிறார்.

Next Story

காதல் கணவன் மனைவி; திடீரென பிரித்த திருமணத்தைத் தாண்டிய உறவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 44

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Advocate-santhakumaris-valakku-en-44

திருமணத்தை மீறிய உறவினால் வந்த சிக்கல் பற்றிய வழக்கை பற்றி நம்மிடையே வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார். 

வல்லரசு என்பவரைப் பற்றிய வழக்கு இது. எளிய குடும்ப பிண்ணனியிலிருந்து மீடியா கனவுகளோடு சென்னை வந்தவர். அது சார்ந்த வேலைகளில் முன்னேறிக் கொண்டு வந்தவர், ஏழ்மையான குடும்பத்திலிருக்கிற பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண்ணுக்கு இருக்கிற கவிதை எழுதுகிற திறமை, நன்றாக மேடைகளில் பேசுவது போன்றவற்றை இவருக்கு தெரிந்த நட்புகளின் மூலமாக வளர்த்து எடுக்கிறார். நிறைய மேடைகளையும் பேச அமைத்துக் கொடுக்கிறார்.

குழந்தை பிறந்ததும் அவளுடைய நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. குழந்தையை கவனிக்காமல் தொடர்ச்சியாக மீட்டிங் என்று முக்கியத்துவம் தந்து வெளியே செல்கிறார். அடிக்கடி வீட்டிற்கு போன் அழைப்பு வந்தால், வெகு நேரம் தனியே சென்று பேசுகிறாள். உடன் வாழ்கிறவளின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை உணர்ந்த வல்லரசு அந்த பெண்ணிடம் விசாரிக்கிறார். பட்டிமன்றப் பேச்சுக்காக நிறைய விவாதிப்பதாக பொய் சொல்கிறாள்.

இவளுடைய போனை ஒருமுறை பரிசோதித்த போது தொடர்ச்சியாக ஒரே எண்ணிலிருந்து அதிக முறை அழைப்பு வந்திருக்கிறது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது, எதிர்முனையிலோ அதிகார தொனியோடு, மிரட்டும் பாவனையில் பேசுகிறார்கள். சிலநாட்கள் கழித்து மூன்று நாட்கள் மீட்டிங் செல்வதாக சென்றவள் வீடு திரும்பவே இல்லை

வீட்டை பரிசோதித்த போது வீட்டிலிருந்த நகை, பட்டு சேலைகள் அனைத்தும் எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். வெகுநாட்களாக தேடியதும் கிடைத்தவள், சென்னைக்கு வர மறுக்கிறாள். அதனால் அவனுடைய ஊரில் தன் அம்மாவோடு கொஞ்ச நாள் விட்டு வருகிறான். ஆனால் அங்கேயும் சண்டையிட்டு எங்கேயோ சென்று விடுகிறாள்.

மறுபடியும் தேடி அலைந்து கண்டறிந்து குழந்தையைப் பார்க்க போன போது, அக்கம் பக்கத்தினர் அவளைப் பற்றிய சில விசயங்களை சொல்கிறார்கள். அவளுடைய வீட்டிற்கு இரவு ஒரு கார் வரும். அதிலிருந்து இறங்குகிறவர் இரவு அங்கே தங்குவார், காலையில் கிளம்பி விடுவார். அந்த நேரத்தில் குழந்தைக்கு மயக்க மருந்தோ அல்லது தூக்க மாத்திரையோ கொடுத்து தூங்க வைத்துவிடுகிறாள் என்று விவரிக்கிறார்கள். இதனால் மனமுடைந்த வல்லரசு, காவல்துறையில் தன்னுடைய மகளை மீட்டுத்தருமாறு வழக்கு தொடுக்கிறார். அத்தோடு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறுகிறார்.