Skip to main content

அதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்! சின்னங்களின் கதை #3

எம்.ஜி.ஆரின் இரட்டை நாடி முகத்தை மைனஸ் பாய்ண்ட்டாகக் கூறி, அவரை மந்திரிகுமாரி படத்தில் நாயகனாக ஏற்க தயாரிப்பாளர்கள் மறுத்தார்கள். உடனே, எம்.ஜி.ஆரின் மெட்டியில் உள்ள பள்ளத்தில் சிறிய தாடியை ஒட்டவைத்து, இவர்தான் எனது கதையின் நாயகன் என்று பிடிவாதமாகச் சொல்லி, அவரை கதாநாயகனாக்கியவர் கலைஞர்.

 

mandhiri kumari mgrஅபிமன்யு படத்திற்கு வசனம் எழுதும்போதே எம்.ஜி.ஆரைக் கவனித்து அவருடன் நண்பரானார். ராஜகுமாரியில் அந்த நட்பு நெருக்கமானது. இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆரின் முகத்தோற்றத்தில் ஒரு உறுத்தல் இருந்தது. அதுதான் அவருடைய இரட்டை நாடி. அந்த இரட்டை நாடியைத்தான் மந்திரிகுமாரி படத்தின் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன் குறையாகச் சொன்னார். அவரையே சமாளித்து தனது கதையின் நாயகனாக்கினார் கலைஞர்.

அதாவது 1947 ஆம் ஆண்டிலிருந்தே சினிமா ஸ்டுடியோக்களில் இருவரும் நண்பர்களானார்கள். 1953 ஆம் ஆண்டுதான் எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி திமுகவில் இணைத்தார் கலைஞர். அப்போதிருந்தே இருவரும் திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார்கள். ஏற்கனவே கே.ஆர்.ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் திமுகவில் இருந்தாலும், கலைஞர்தான் முழுநேர திமுக உறுப்பினராகத் தமிழகம் முழுவதும் சுற்றியவர். அவருடைய பேச்சைக் கேட்க தனியே ஒரு கூட்டம் உருவானது.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுக்குக் கிடைக்காத நண்பர்கள் கூட்டம் கலைஞருக்குக் கிடைத்தது. தமிழகம் முழுவதும் கூட்டம் பேசச் செல்லும் கலைஞர், தான் போகிற ஊர்களில் உள்ள கழகத் தோழர்களை மட்டுமல்லாமல், தனது திரைப்பட வசனங்களை ரசிப்போரையும் சந்தித்து திமுகவில் இணைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மற்ற முன்னணித் தலைவர்கள் தாங்கள் செல்லும் பொதுக்கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளை மேடையில் சந்திப்பதோடு சரி. ஆனால், கலைஞர், தன்னை பேச அழைக்கும்வரை மேடைக்கு பின்புறம் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களிடம் தோழமையை ஏற்படுத்திக் கொள்வார். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார். திமுக முதன்முதல் தேர்தலில் போட்டியிட்டபோதே வாய்ப்புக்கிடைத்து குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு ஏரியா பண்ணையாரை திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் ஜெயித்தார் கலைஞர். 
அப்போதிருந்து கட்சிக்குள் அவருக்கும் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கும் எதிராக ஒரு குழு உருவானது. கலைஞருக்கு கட்சியில் கிடைக்கும் முக்கியத்துவதைச் சகிக்கமுடியாத ஈ.வி.கே.சம்பத் முதல்முறையாகக் கட்சியை பிளந்தார். ஆனால், அந்த பிளவு திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 


 

mgr with karunanidhi


1967 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மிகப்பெரிய கோபம் மக்கள் மத்தியில் இருந்தது. அத்துடன் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவமும் சேர்ந்துகொண்டது. திமுக அணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கூட நிறையாத நிலையில் அண்ணா மறைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவின் பொருளாளராக இருந்த கலைஞருக்கு பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலைஞரை ஆதரவளிப்பதை எம்ஜியாரும் அறிந்தார். நீண்டகால நண்பர் என்பதால் எம்.ஜி.ஆரும் ஆதரி்ததார். கலைஞர் முதல்வரானார்.

கலைஞர் முதல்வரான சமயத்தில் எம்.ஜி.ஆர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தால் இருவருக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ள முடியும். மத்தியில் இந்திரா அரசுக்கு ஆதரவு அளித்ததால் அங்கும் திமுகவின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதேசமயம், தமிழ்நாட்டுக்கென தனித்தன்மையையும் திமுகவின் தனித்தன்மை, அதன் கொள்கைகளை அமல்படுத்துவதில் உறுதி என்று கலைஞர் பெரியார், அண்ணா ஆகியோரின் அடியொற்றி செயல்பட்டார். தந்தை பெரியாரின் விருப்பம் அறிந்து அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய சமூகநீதி திட்டங்கள் பலவற்றை சட்டவடிவமாக்கினார்.

1970ல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தையும் பிறப்பித்தார் கலைஞர். இந்த சட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கப்பட்டது. தமிழக அரசும் இந்தத் தடையை எதிர்த்து வழக்காட முடிவுசெய்தது. மாநில உரிமைகளுக்காக கலைஞரின் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்தது. மாநில சுயாட்சிக்காக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவையும் கலைஞர் அமைத்தார். தேசியக் கொடியுடன் தலைமைச் செயலகத்தில் தமிழகத்துக்கென்று ஒரு கொடியையும் கலைஞர் வடிவமைத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

விடுதலை தினத்தன்று மாநில ஆளுநர்கள் கொடியேற்றும் முறையை மாற்றி மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றதிலும், அரசு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்து பாடும் முறையை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்ததிலும் கலைஞரின் நடவடிக்கைகள் மத்திய அரசை மட்டுமின்றி பார்ப்பனர்களை மிகவும் அச்சுறுத்தியது.


 

pillayo pillai mkm

மு.க.முத்துஎனவேதான் 1971 தேர்தலில் திமுக ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று ராஜாஜி சபதம் செய்து காமராஜருடன் கூட்டணி அமைத்தார். இந்திரா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸுக்கு மக்களவைத் தொகுதியில் மட்டும் 9 தொகுதிகளை கலைஞர் ஒதுக்கினார். சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியைக்கூட ஒதுக்க கலைஞர் மறுத்துவிட்டார். கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில், தந்தை பெரியார் ராமர் சிலையை செருப்பால் அடித்தார் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. திமுகவுக்கு எதிராக நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 203 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மக்களவைக்கு நடந்த தேர்தலில் திமுக 23 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 9 இடங்களையும் மொத்தத்தில் கூட்டணி 38 இடங்களையும் வென்றது.

இந்த வெற்றி டெல்லியை 
திகைக்க வைத்தது. கலைஞரின் மாநில உரிமைப் போக்கும், சமூகநீதித் திட்டங்களும், அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னுரிமையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமும் அவர்களுடைய ஆதிக்கத்தை அடியோடு தகர்த்துவிடும் என்று அஞ்சினார்கள். திமுகவை உடைக்க சரியான ஆளைத் தேடினார்கள். அச்சுறுத்தலுக்கு பயப்படும் ஆளாக இருக்க வேண்டும். அதேசமயம் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும் என்று தேடியதில் எம்.ஜி.ஆர் சிக்கினார். தேர்தல் முடிந்த கையோடு மதுரையில் திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் பேரணியில் முகப்பில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து குதிரைமீது அமர்ந்து திமுகவின் கொடியை பிடித்தபடி வந்தார். அவர் அப்போதுதான் கலைஞர் கதை வசனம் எழுதிய பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருந்தார். அந்தப் படத்தை எம்.ஜி.ஆர்தான் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்திருந்தார். 

இப்படி இருந்த நட்பு... பின் கட்சியில் நடந்த பிளவு... அடுத்த பகுதியில் பார்க்கலாம்...  

 

முந்தைய பகுதி...

கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்