இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான தகுதித் தேர்வான யோ-யோ டெஸ்ட் கண்டிப்பாக இருக்கவேண்டும் என கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. ஆனால், சுற்றுப்பயணத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட யோ-யோ டெஸ்டில் அவர் தோற்றதால், அதில் கலந்துகொள்வது கேள்விக்குறியானது. அதற்கு முன்னர், ஐ.பி.எல். தொடரில் சக்கைப் போடு போட்ட ராயுடுவை, ஒரேயொரு தேர்வால் நிராகரித்தது தவறு. அவருக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஆதரவுக்குரல்கள் ஒலித்தன.
அதற்கடுத்தபடியாக அவர் கலந்துகொண்ட யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்று, இந்தியா ஏ அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். இந்நிலையில், இந்திய அணியில் வீரர்களுக்கான தேர்வில் யோ-யோ டெஸ்ட் போன்ற ஒன்று கண்டிப்பாக இருப்பது அவசியம் என ராயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்த போது என்னை நானே நொந்துகொண்டேன். அந்தத் தேர்வைக் கட்டாயமாக்குவதில், எனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. ஒவ்வொரு இந்திய வீரரும் இதுபோன்ற ஃபிட்னஸ் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். உண்மையைச் சொன்னால், நான் அதை நம்புகிறேன். அதில் தோற்றதை எண்ணித்தான் வருந்தினே தவிர, கடுமையாக முயற்சித்து அதில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.