உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நடந்த 8-வது ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா மற்றும் இந்திய அணிகள் இங்கிலாந்து ரோஸ் பவுல், சௌதாம்ப்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஹசிம் ஆம்லா, குவிண்டன் டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பும்ரா வேகத்தில் ஆம்லா ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து, 2 ஓவர்கள் கழித்து டி காக்-ஐயும் பும்ரா 10 ரன்களில் அவுட் ஆக்கினார். பின்னர், களமிறங்கிய கேப்டன் டூ பிளீசிஸ் சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு சப்போர்ட் ஆக வான் டெர் டுசென் நின்றார். 20-வது ஓவரில் டூசென் 22 ரன்கள் எடுத்த நிலையில், சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து முக்கிய வீரர் டுமினி ஆட வந்தார். 23-வது ஓவரில் அவரையும் சாஹல் 3 ரன்களில் வெளியேற்றினார். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருக்க, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா. முதல் 2-வது ஓவரில் 8 ரன்கள் எடுத்து ஷிகர் தவான் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி 18 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயரத்தொடங்கியது. கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து மஹேந்திர சிங் டோனி களம் இறங்கினார். அவர் சிஸ்சர் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா அணியின் வீரர் கிறிஸ் மோரிஸ்டம் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை 47.3 ஓவரில் எட்டினார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 122 ரன்கள் (13 பவுண்டரிகள், 2சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போல் ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 230/4 (47.3 ஓவர் ) எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற முதல் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 122 எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் 42 எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் நிதான ஆட்டமே காரணம். இந்நிலையில் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.