Skip to main content

’தல’ தோனியிடம் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.... முன்னாள் வீரர்

Published on 08/10/2018 | Edited on 08/10/2018

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இல்லை. இன்னும் சொல்ல போனால், மோசமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலான போட்டிகளில் டாப் 3 ஆட்டக்காரர்கள்  சிறப்பாக விளையாடி வருவதால், மிடில் ஆர்டர்களின் மோசமான பேட்டிங் போட்டியின் முடிவில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை. எனினும், 2019 உலக கோப்பையை பெறுவதற்கு மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 

 

dd

 

விராட் கோலி – 1, ரோஹித் ஷர்மா - 2, ஷிகர் தவான் – 5 என இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூட ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 15 இடங்களில் இல்லாதது கவனிக்கத்தக்கது.

 

டாப் 3 பேட்ஸ்மன்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் தன்னுடைய பங்களிப்பை சரியான முறையில் செய்து வருகின்றனர். தற்போது விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் தோனி மட்டுமே மிகவும் அனுபவம் உள்ளவர். தோனி உலக கோப்பை போட்டியில் விளையாடுவது உறுதி. அவர் 5-வது வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அவருடைய பேட்டிங் சில காலங்களாக பெரிய அளவில் சிறப்பாக இல்லை என்பதே உண்மை.

 

ddd

 

உலகில் தலை சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனி 2019 –ம் ஆண்டு உலக கோப்பைக்கு இந்திய அணியின்  முக்கிய வீரராக இருப்பார். ஆனால் அவரது பேட்டிங் கடந்த சில தொடர்களில் பெரிய அளவில் இல்லை. இதனால் அவரது பேட்டிங் பற்றி பல மோசமான விமர்சனங்களுக்கும் ஆளாகிறார். இது குறித்து முன்னாள் கிரிகெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் கருத்து தெரிவித்துள்ளார். தோனி சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் சிறந்த வழிகாட்டி. ஆனால் பேட்ஸ்மேனாக அவர் மீது உள்ள எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அவர் இனியும் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் இல்லை எனவும் கூறியுள்ளார். தோனி அனுபவமுள்ள வீரர் என்பதால் 2019 உலக கோப்பைக்கு கேப்டன் கோலிக்கு பெரிதும் உதவியாக இருப்பார் என்றும் கூறினார். 

 

இதேபோல சென்ற வருடமும் தோனியின் பேட்டிங் பற்றி அஜித் அகர்கார் மற்றும் வி.வி.எஸ்.லக்ஸ்மன் ஆகியோர் விமர்சனங்கள் தெரிவித்திருந்தனர். தோனி ஐபிஎல் 2018–ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி மூன்றாவது முறையாக கோப்பையை பெற்று தந்து விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் அதற்கு பிறகு நடந்த தொடர்களில் அவரின் பேட்டிங் ஜொலிக்கவில்லை. ஐபிஎல்-க்கு அடுத்த மாதமே இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கண்டபோது தோனியால் ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை, இங்கிலாந்தில் உள்ள நிலைமைக்கு காட்டமுடியவில்லை. இங்கிலாந்து தொடரில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 63 என்பது கவனிக்கத்தக்கது.  

 

ஆசிய கோப்பை இறுதிபோட்டியில் வங்கதேச அணியுடன் 67 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே குவித்தார். குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். கடந்த சில தொடர்களில் தோனியின் பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இரண்டு வருடங்களாக அவரின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைந்து வருகிறது. 2018 –ல் அவரின் சராசரி 28 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 67 ஆகும். இதுவரை தோனியின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இந்த அளவில் குறைந்தது இல்லை. 

 

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என அஜித் அகர்கார் கருத்து தெரிவித்துள்ளார். சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ரிஷப் பண்ட்டை ஆட வைப்பதால் பாதிப்பு எதுவும் இருக்காதென அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.