Skip to main content

ஆஸி. தொடரில் விராட் கோலி படைக்க இருக்கும் புதிய சாதனை!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020
virat kohli

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடரை வெற்றியுடன் துவக்க தீவிர முனைப்பு காட்டிவருகின்றனர்.

 

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் புதிய சாதனை படைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 43 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11,867 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 133 ரன்கள் எடுப்பதன் மூலம் ஒருநாள் போட்டியில் 12,000 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இணையவுள்ளார். விராட் கோலி இந்தப்பட்டியலில் இணையப்போகும் ஆறாவது வீரராகும்.

 

மேலும், 300-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடி விராட் கோலி இந்தச் சாதனையை படைக்க இருப்பதால், குறைவான போட்டிகளில் விளையாடி 12,000 ரன்களை எட்டிய முதல்வீரர் என்ற சாதனையை விராட் கோலி பதிவு செய்யவிருக்கிறார். இன்னும் 133 ரன்கள் மட்டுமே தேவையென்பதால் எதிர்வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலேயே இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிது.

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.