இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிறு அன்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையடுத்து, அணித் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியா அணியில் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தநிலையில் இந்தியா, தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. வரும் ஞாயிறு அன்று (31.10.2021) நடைபெறவுள்ள அந்தப் போட்டியில், ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்க கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாட அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.