மின்னல் தாக்கி இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்கள் பலியான துயர சம்பவம் ஒன்று வங்காளதேசத்தில் நடந்துள்ளது.
வங்காளதேசத்தில் இடி, மின்னல் தாக்கி மக்கள் பலியாகும் சம்பவம் 2016-ம் ஆண்டு முதல் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையேயான பருவ காலங்களில் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் தற்போது மிசானுர் ரஹ்மான் மற்றும் முகமது நதீம் என்ற இரு இளம் வீரர்கள் மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கும்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த மைதானத்தில் இவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட மழையினையடுத்து பயிற்சி தடைபட்டுள்ளது. அதனால் அவர்கள் கால்பந்து விளையாட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "திடீரென அனைத்தும் நடந்துவிட்டது. மின்னல் தாக்கியதை பார்த்து அதிர்ச்சியுடன் அங்கு ஓடினோம், மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றோம். அதில் இருவர் இறந்துவிட்டனர்" என்றார்.
இந்த ஆண்டு மட்டும் வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை குறைந்த பட்சம் 350 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.