Skip to main content

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

 

Next Story

மின்சார ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Attention electric train passengers

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (23.07.2024) முதல் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி (14.08.2024) வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தினசரி காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 10.00 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும் இயக்கப்படும். அதே போன்று செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் (23.07.2024) முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி (14.08.2024) வரை குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Attention electric train passengers

அதே சமயம் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் சுற்றுப் பேருந்து சேவையாக (shuttle service) இயக்க உள்ளது. எனவே இந்த நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (02.08.2024) வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாகச் சிறப்பு பயணிகள் இரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Armstrong case Petition to take 3 people into custody and investigate

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி என 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் (20.07.2024) கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள், திருமலையை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.