“தோனியை விமர்சிப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதேநிலை அடுத்த சில போட்டிகளில் தொடரும் பட்சத்தில் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பும் கேள்விக்குறியாகிவிடும். இதனால், சென்னை அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அணியின் கேப்டனான தோனி கூடுதலான அளவில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி தோனிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "அனைத்து வீரர்களுக்கும் ஏற்றம், இறக்கம் என இரண்டும் இருக்கும். இது அந்தந்த நேரத்தைப் பொறுத்து மாறுபடும். தோனி மீது தற்போது விமர்சனத்தை முன்வைப்பவர்களைப் பார்த்து பரிதாப்படுகிறேன். ஒரு சமயத்தில் தோனி சிறந்த ஃபினிஷராக இருந்ததை மறக்கக்கூடாது. அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடுகிறார். அது தோனியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீரர்களோடு ஒப்பிடும்போது, இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடன் யாரும் இல்லை. எதிர்காலம் குறித்து ஒரு வீரருக்கு நிறைய நெருக்கடி இருக்கும். இது நடப்பது இயல்பானது, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.