தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு சன் ரைசர்ஸ் அணியால் 80 சவரன் தங்க சங்கிலியுடன் கூடிய மெடல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே கடந்த 20 ஏப்ரல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் 65 அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் உட்பட மூத்த வீரர்கள் பலரும் அவரது பந்து வீச்சைப் பாராட்டினர்.
ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைப் பாராட்டி அந்த அணியின் வீரர்கள் கவுரவிக்கப்படுவதும், அதை வீடியோ எடுத்து அணிகள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதும் தற்போது டிரெண்டாகி வருகிறது. மற்ற அணிகள் சிறிய அளவிலான தங்க பேட்சுகள் மற்றும் இதர பரிசுகளை வழங்கி வருகிறது. ஆனால், சன் ரைசர்ஸ் அணி ஒருபடி மேலே போய் ஒரு பெரிய தங்க சங்கிலியையே பரிசாக நடராஜனுக்கு வழங்கி கவுரவம் செய்துள்ளது. 80 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்து, அவர் அந்த சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.