இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் தவான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மனம் நெகிழ்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இன்று அவர், இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்து 10 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஷிகர் தவான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், "10 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். இதை விட பெரிய மரியாதை வேறெதுவும் இல்லை. என் தாய்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது நிறைய நினைவுகளை எனக்கு தந்துள்ளது. அதற்காக என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இதுவரை 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 17 சதங்கள் மற்றும் 29 அரை சதங்கள் உட்பட 5688 ரன்கள் குவித்துள்ளார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 2,315 ரன்கள் குவித்துள்ளார். 60 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்கள் அடித்து 1588 ரன்கள் குவித்துள்ளார்.