Skip to main content

சச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

விளையாட்டு உலகின் மிகப்பெரிய அங்கீகார விருதுகளில் ஒன்றாக இருக்கிறது லாரியஸ் விருது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கோலாகலமாக நடைபெற்றது. 
 

sachin tendulkar

 

 

இதில் விளையாட்டில் சிறந்த தருணத்திற்கான லாரியஸ் விருதினை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டிற்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. இலங்கையுடனான அந்த இறுதிப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இருந்த சச்சினை மேட்ச்சில் வெற்றிபெற்றவுடன் இந்திய வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வலம் வந்தனர். இந்த தருணத்தை கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற சிறந்த தருணம் என்று குறிப்பிட்டு அதற்காக சச்சினிற்கு விருதும் வழங்கியுள்ளது லாரியஸ் விருது குழு.

சிறந்த வீரருக்கான விருது, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஆறு முறை சாம்பியனான லீவிஸ் ஹேமில்டனுக்கும், நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன்மூலம், லாரியஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காரர் ஆனார்.

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவானும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை வென்றவருமான சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா, சிறந்த அணிக்கான விருதை வென்றது. லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி வென்றார்.

 

 

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.