இங்கிலாந்து கிரிக்கெட் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது லார்ட்ஸ் மைதானம்தான். இங்கிலாந்தின் மிகவும் பாரம்பரியம் மிக்க இந்த மைதானத்தில் விளையாடுவதும், வெற்றிபெறுவதுமே பல அணிகளின் விருப்பமாக இருக்கும். 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றதும், அது வரலாற்று நிகழ்வாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்னொன்று, லார்ட்ஸ் மைதானத்தில் ஆட்டம் தொடங்குவதற்கு முன் ஒலிக்கும் பெல் சத்தம். உலக கிரிக்கெட்டில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர்கள், முக்கிய தலைவர்களும் ஒலிக்கச் செய்யும் இந்த லார்ட்ஸ் பெல் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. 2007-ஆம் ஆண்டில் இருந்து இசைக்கப்படும் இந்த பெல்லிற்கு மெக்கா ஆஃப் கிரிக்கெட் என பெயரிடப்பட்டிருக்கிறது. லார்ட்ஸ் பெவிலியன் பகுதியில் இருக்கும் இந்த பெல்லை, போட்டி தொடங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னர் சிறப்பு விருந்தினர் இசைப்பார். இதனால், அந்த சிறப்பு விருந்தினருக்கும், சிறப்பு விருந்தினரால் போட்டிக்கும் பெருமை என்பதுதான் இதன் நோக்கமே.
இதுவரையில், விவியன் ரிச்சர்ட்ஸ் தொடங்கில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் மெக்கா ஆஃப் கிரிக்கெட்டை இசைத்திருக்கின்றனர். இந்தியாவின் சார்பில் கபில் தேவ், கங்குலி, ட்ராவிட், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் இசைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இந்த வாய்ப்பினை சச்சின் தெண்டுல்கர் பெற்றுள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று ஆராதிக்கப்படும் சச்சின் இந்த பெல்லை இசைப்பது பெருமைதானே!