ஐபிஎல்-இல் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2024 இன் 20ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை அதிரடி துவக்கம் தந்தது. முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது. அதிரடியாக ஆடினாலும் இருவரும் அரை சதத்தை தவற விட்டு ரோஹித் 49 ரன்களிலும், இஷான் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா டக் அவுட் ஆனார், திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹர்திக், டிம் டேவிட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரொமாரியோ ஷெப்பெர்டுடன், டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். முக்கியமாக 10 பந்துகளை மட்டுமே சந்தித்த ரொமாரியோ 39 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரான நோர்க்யா ஓவரில் 4 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 4ஆவது அதிகபட்ச ஸ்கோராகும்.
பின்னர் ஆடிய டெல்லி அணிக்கு வார்னர் 10, விரைவில் ஆட்டமிழந்தாலும், பிரித்வி ஷாவும், பொரேலும் இணைந்து அதிரடியாக ஆடினர். 2ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த இந்த இணையை பும்ரா பிரித்தார். பிரித்வி ஷா 66 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். பொரேல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஸ்டப்ஸ் மட்டும் தனியாளாகப் போராடி 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் 8 ஆவது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸன் ரோஹித் சர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐபிஎல்-இல் 4ஆவது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக 2ஆவது அதிகபட்ச கேட்சாகும். பொல்லார்டு 103 கேட்சுகளுடன் மும்பை அணி சார்பாக அதிக கேட்சுகள் பிடித்துள்ளார். ஐபிஎல் இல் 110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், ரெய்னா 109 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.