Skip to main content

ரசிகர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

rohit sharma and indian players

 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கரோனா தொற்றால் அணிகள் கரோனா தடுப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். மேலும் அணி வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், சமீபத்தில் அணியுடன் இணைந்த ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் மெல்போர்னில் ஓரிடத்தில் உணவருந்தியுள்ளனர். அப்போது அங்குவந்த இந்திய அணியின் ரசிகர் ஒருவர், வீரர்களின் உணவிற்குப் பணம் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த் அந்த ரசிகரை கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

 

இதனை அந்த ரசிகர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இந்திய அணி வீரர்கள் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகிய ஐவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள், கரோனா தடுப்பு விதிகளை மீறினார்களாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

 

 

Next Story

ரோஹித் சொன்னதைச் செய்த பண்ட்; கலக்கிய டெல்லி அணி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024

 

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.

பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.

பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவைத் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ய்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.