இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து, இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய ரிக்கி பாண்டிங், “இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை கூட எடுக்காது என நினைக்கிறேன்” என்று கூறினார். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்தாலும், புஜாராவின் நிதானமான ஆட்டத்தாலும் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. இதையடுத்து, இந்தியா 200 ரன்களைக் கூட தொடாது என சொன்ன ரிக்கி பான்டிங்கை வீரேந்திர சேவாக், தொடங்கி இந்திய ரசிகர்கள் வரை அனைவரும் கிண்டல் செய்ய தொடங்கினர். சேவாக், பாண்டிங்கை ரிஷப் பந்த் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரோல் செய்திருந்தார்.
இந்நிலையில், தன் மீதான ட்ரோலுக்கு, ரிக்கி பாண்டிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். "இந்தியா 200 ரன்களுக்குக் குறைவாக எடுக்கும் என்ற கணிப்புக்கு இது ரொம்ப அதிகம். நான் எதிர்பார்த்த அளவிற்கு பிட்ச் இன்னும் மோசமாகவில்லை. ரிஷப் பந்த் விளையாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது. இந்த சூழ்நிலைக்கு அவர் ஆடிய விதம்தான் சரியானதாகும்" என கூறியுள்ளார்.