இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி நேற்று முன்தினம் (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இந்தச்சூழலில் இந்தியாவின் தோல்வியையடுத்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை, ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கடுமையாக வசை பாடி வருகின்றனர். அதேநேரத்தில் ரசிகர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஷமிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி போட்டியைப் பாகிஸ்தான் வெல்லக் காரணமாக இருந்தவருமான முகமது ரிஸ்வான், ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு வீரர், தனது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அனுபவிக்கும் அழுத்தமும், நடத்தும் போராட்டங்களும், செய்யும் தியாகங்களும் அளவிட முடியாதவை. முகமது ஷமி ஒரு நட்சத்திரம். உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். உங்கள் நட்சத்திரங்களை மதியுங்கள். இந்த விளையாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அவர்களைப் பிரிக்கக்கூடாது" எனக் கூறியுள்ளார்.