ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, பட்டாசு வெடிப்பது போல் மைதானத்தில் பவுண்டரி மற்றும் சிக்சர்களால் கொல்கத்தா வீரர்கள் வாணவேடிக்கை நிகழ்த்தினர். சால்ட், நரைன் துவக்கமானது அதிரடியாக அமைந்தது. நரைன் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயரும் தன் பங்கிற்கு காட்டடி அடித்தார்.
சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அதிரடியைத் தொடர்ந்த வெங்கடேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பேட்டிங்கில் கலக்கி, பவுலிங்கிலும் ஒரு விக்கெட் எடுத்த நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.