Skip to main content

இடைக்கால பயிற்சியாளர் இல்லை... 2023 உலகக்கோப்பை வரை பொறுப்பேற்கவிருக்கும் ராகுல் டிராவிட்! 

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

rahul dravid - ganguly

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியை, அதிகாரபூர்வமற்ற முறையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

 

பிசிசிஐ முதலில் ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொன்னதாகவும், ஆனால் டிராவிட் மறுத்துவிட்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து பிசிசிஐ, அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ். லட்சுமணை அடுத்த பயிற்சியாளராக  நியமிக்க ஆலோசித்துவருவதாகவும், இதுதொடர்பாக அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், நேற்று (15.10.2021) இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிபோட்டியின்போது, ராகுல் டிராவிட்டோடு பிசிசிஐ தலைவர் கங்குலியும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் டிராவிட்டுக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ராகுல் டிராவிட் 2023 உலகக்கோப்பை முடியும்வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என கருதப்படுகிறது.

 

ராகுல் டிராவிட், அடுத்து இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து தொடரின்போது தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Next Story

இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையா? விளக்கமளித்த டிராவிட்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Disciplinary action against Ishan Kishan? Explained by Dravid

இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.

தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

- வெ. அருண்குமார்  

Next Story

ஜெய்ஷா மீது இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் பகிரங்க குற்றச்சாட்டு!

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Ex-captain of the Sri Lankan team publicly Jaysha

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 9 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்வி மற்றும் 2 வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. மேலும், 33 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

இதையடுத்து, உலகக்கோப்பை தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தார். மேலும், அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜூனா ரணதுங்காவை நியமித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றிருந்தனர். அதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குள் அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கமளித்து இருந்தது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், “பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது பதவியை பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை சிதைக்கிறார். அவரது அழுத்தத்தால்தான் இலங்கை கிரிக்கெட் அழிக்கப்படுகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கும், இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரத்தில் உள்ள ஜெய்ஷா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்க முயற்சிக்கிறார். இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் (ஜெய்ஷா) இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தை அமித் ஷாவால் மட்டுமே ஜெய்ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்” என தெரிவித்துள்ளார்.