நடப்பு ஐபிஎல் சீசனின் 33 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய சென்னை அணியில் அனைத்து பேட்டர்களும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ருதுராஜ் 20 பந்துகளில் 35 ரன்களை விளாச கான்வே 56 ரன்களை அடித்தார். பின் இணைந்த ரஹானே ஷிவம் துபே ஜோடி கொல்கத்தா அணியின் பந்துகளை மைதானத்தில் சிதறடித்தனர். சிக்ஸர் மழைகளை பொழிந்த இந்த ஜோடியில் ரஹானே 29 பந்துகளுக்கு 71 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 21 பந்துகளுக்கு 50 ரன்களும் ஜடேஜா 8 பந்துகளுக்கு 18 ரன்களும் குவித்தனர்.
236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன் 1 ரன்னிலும், சுனில் நரைன் ரன் எடுக்காமலும் வெளியேறினர். பின் வந்த நிதிஷ் ராணா, வெங்கடெஷ் ஐயர் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் ஜேசன் ராய் மற்றும் ரின்கு சிங் அதிரடி காட்டினர். ஆனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்களை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களையும் ரின்கு சிங் 53 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியில் தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 2 விக்கெட்களையும் மொயின் அலி, ஜடேஜா, பதிரானா, ஆகாஷ் சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் கான்வே 50 ரன்களை அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 4 முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் 9வது வீரராக இணைந்துள்ளார். இதில் ஷேவாக், பட்லர், வார்னர் ஆகியோர் தொடர்ச்சியாக 5 முறை 50 அல்லது 50+ ரன்களை அடித்த வீரர்களாக உள்ளனர்.
இந்த போட்டியில் ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்த போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார். மொத்தமாக சென்னை அணி தனது இன்னிங்ஸில் 18 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளது. பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை பறிகொடுத்த அணிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 17 விக்கெட்களை இழந்து முதலிடத்தில் உள்ளது.