கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டன. அதேபோல் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் மார்ச் மாத இறுதியில் தொடங்க இருந்த 13வது ஐபிஎல் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது. பின் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து அதிகராப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ இருந்து வருகிறது. இந்தியா, சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலையடுத்து சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழத்தொடங்கின. ஆனால் பிசிசிஐ நிர்வாகம் இந்தாண்டும் விவோ நிறுவனம் ஸ்பான்சராக தொடரும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதனையடுத்து விவோ நிறுவனம் இந்தாண்டிற்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. தற்போது பிசிசிஐ புது ஸ்பான்சரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விவோ விட்டுச்சென்ற இடத்தை பிடிப்பதற்கு கோகோகோலா, அமேசான், அதானி குழுமம், டாடா குழுமம், ஜியோ, பைஜுஸ் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. தற்போது அந்தப் போட்டியில் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே. திஜார்வாலா பேசும்பொழுது, இந்தாண்டிற்கான ஐபிஎல் ஸ்பான்சராக இருக்கலாம் என்று யோசித்துள்ளோம், அதன்மூலம் எங்கள் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலக அளவில் ஒரு சந்தை உருவாகும். தற்போது பிசிசிஐ நிர்வாகத்தை முறைப்படி அணுக உள்ளோம் என்றார்.