2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இந்தநிலையில் முக்கிய வீரர் விலகலால் நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி, கடந்த புதன்கிழமை (10.11.2021) நடைபெற்றது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை நியூசிலாந்து அணி துரத்தியபோது, நன்றாக பேட்டிங் செய்து 46 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர் டெவோன் கான்வே, பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆட்டமிழந்த ஆத்திரத்தில் தனது பேட்டை ஓங்கி குத்தினார். இதில் அவரது கை உடைந்துள்ளது.
இதனையடுத்து அவர், இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்து நடைபெறவுள்ள இந்திய தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டெவோன் கான்வே இறுதிப் போட்டியில் விளையாடாதது நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது.