இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க காலத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி, பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் தோல்வியை மட்டும் சந்தித்த தோனி, அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடி தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டன் வரை வளர்ந்தார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய உலகக்கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ‘கூல் கேப்டன்’, ‘பெஸ்ட் ஃபினிஸர்’ எனவும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக தலைமையேற்று 4 கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும், பல தொடர்களில் இந்திய அணிக்காக வெற்றிகளை வாரி வழங்கியுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதலே தோனி ஜெர்ஸி எண் 7ஐ அணிந்து விளையாடி வந்தார். தோனி பிரபலமடைந்ததைப் போல, அவருடைய ஜெர்ஸி எண்ணும் பிரபலமடைந்தது. தோனியின் ஜெர்ஸி நம்பரான ‘7’ ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருந்தது. இதனையடுத்து, பல சாதனைகளை படைத்த தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றிருந்த போதிலும், அவருடைய ஜெர்ஸி நம்பரான 7 இதுவரை எந்த வீரருக்கு அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோனியின் ஜெர்ஸி நம்பர் ‘7’க்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டிற்கு, முன்னாள் கேப்டன் தோனி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், ‘7’ஆம் நம்பர் பொறித்த ஜெர்ஸியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இனி பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக முன்னாள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில், அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.