எப்போதுமே அனைத்து விஷயங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டவையே. ஏறத்தாழ அனைத்து விளையாட்டுகளிலும் தேவைக்கேற்ப அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே வரப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட்டில் பல புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி.
இதற்கு முன் கிரிக்கெட் போட்டியின் போது பந்தைப் பளபளக்கச் செய்ய வீரர்கள் எச்சிலை பயன்படுத்துவது வழக்கம். கரோனா காலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகமெங்கும் பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. அந்த வகையில் கிரிக்கெட் போட்டியிலும் பந்துவீச்சின் போது வீரர்கள் பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என விதி கொண்டு வரப்பட்டது. இனிமேல் அது நிரந்தரமாக நடைமுறைக்கு வர இருக்கிறது.
பந்து வீச்சாளர் பந்துவீச ஓடி வருகையில் பேட்ஸ்மேனின் கவனத்தை பீல்டிங்கில் ஈடுபடும் வீரர்கள் சிதைத்தால் 5 ரன்களை பேட்டிங் செய்யும் அணிக்கு நடுவர்கள் வழங்கலாம்.
ஆட்டத்தின் போது ஏதேனும் பேட்ஸ்மேன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனால் எதிர் முனையிலிருந்த வீரர் பேட்டிங் செய்யும் முனைக்கு வந்து அடுத்த பந்தை அவர் எதிர்கொள்ளுவார். ஆனால் இனிமேல் புதிதாக பேட்டிங் செய்ய வரும் வீரர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும்.
பந்து வீச்சாளர்கள் பந்து வீச வருகையில் அவர்கள் கைகளிலிருந்து பந்து விடுதலை ஆகும் முன் பந்து வீசும் முனையில் உள்ள பேட்ஸ்மேன் கோட்டைத் தாண்டி சென்றால் பந்து வீச்சாளர் அவரை அவுட் செய்யலாம். இதற்கு முன் இந்த முறை நியாயமற்றதாக பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் இந்த முறை அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக பார்க்கப்படும்.