/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nee-ni_0.jpg)
19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடந்த 9 நாட்களாக நடந்துவந்த போட்டியில் நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், பங்குபெற்ற 12 போட்டியாளர்களில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 3 இந்தியர்கள் கலந்து கொண்டனர். அதனால், இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி 2 வது சுற்றில் நீரஜ்சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டிஎறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் 40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகளசாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.அவரைத்தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2வது இடத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 84.77 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 5வது இடத்தையும், டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6வது இடத்தையும் பிடித்தனர்.
நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு இதே நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று இருந்தனர். தங்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஆண்கள் அணிகளுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் 17 அணியினர் இரு குழுவாகப் பிரிந்து தகுதி சுற்றில் ஓடினர். முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழுவினர் 2 நிமிடம் 59.05 வினாடிகளில் இலக்கை அடைந்து 2வது இடத்தை பிடித்து 8 அணிகளில் ஒன்றாக இறுதி சுற்றில் நுழைந்தனர். 2 நிமிடம் 58.47 வினாடிகளில் இலக்கை அடைந்து அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்பு ஜப்பான் 2 நிமிடம் 59.51 வினாடிகளில் எட்டியதே ஆசிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணியினர் முறியடித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)