Skip to main content

எடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...!!! எழுதப்பட்ட புது வரலாறு!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

natarajan

 

"இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால் மனிதக் குலத்தின் பெரும் பாய்ச்சல்" நிலவில் கால் வைத்தபோது, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கூறிய வார்த்தைகள் இவை. நடராஜன் இன்று, இந்திய அணியில் இடம்பிடித்தது, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறிந்தவர்களுக்கு, இது நிலவில் கால் வைப்பது போன்ற சாதனைதான் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான், அவரின் ஒரு விக்கெட்டிற்குக்கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம்.

 

நடராஜன் இன்று, 'முதல்' விக்கெட்டை வீழ்த்தியபோது, 'கிரிக்பஸ்' என்ற மிகப் பிரபலமான கிரிக்கெட் இணையதளம், "சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது" என வர்ணித்தது. இதற்கு முன்பு இந்திய அணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ்கள், சென்னை போன்ற பெரும் நகரங்களிலிருந்தே கிளம்பியிருக்கின்றன. முதல்முறையாகக் கிராமத்திலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் கிளம்பியதால்தான், இவ்வளவு கொண்டாட்டங்கள்.

 

மேலும், இதற்குமுன்பு கிளம்பிய  எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, இந்திய அணிக்குள் நுழையும் வரை ஒரு எக்ஸ்ட்ரா என்ஜின் துணையுண்டு. ஆனால், சின்னம்பட்டி  எக்ஸ்பிரஸிற்கு எப்போதும் ஒரே ஒரு என்ஜினின் துணைதான். ஆம்! நடராஜனை தவிர இதற்கு முன்பு இந்திய அணிக்குள் நுழைந்தவர்களுக்கு, அதிகாரம், செல்வாக்கின் துணையிருந்தது. நடராஜனுக்கோ, அவரது திறமை மட்டும்தான் இன்றுவரை துணையாக இருந்து வருகிறது. 

 

நடராஜனுக்கு  முன், அதிகாரம், பின்புலம், செல்வாக்குடன் சென்றவர்கள்கூட சிறிது காலத்தில் கழட்டி விடப்பட்டிருக்கிறார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 80 -களில் நிலையான இடத்தை, தக்க வைத்திருந்தார். பிறகு லட்சுமிபதி பாலாஜி, நிலையான இடத்தை தக்கவைப்பார் என நினைக்கும்போது, காயங்கள் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் காயப்படுத்தியது. தற்போது, தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில், சடகோபன்ரமேஷ்,ஹேமங் பாதனி ஆகியோர் இந்திய அணிக்கு ஆடியதை, வர்ணனைக்கு நடுவே கூறும்பொழுது, "இதெல்லாம் நீ சொல்லித்தானேப்பு எனக்கே தெரியும்" என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாகா இருக்கிறது.

 

முதல் தர கிரிக்கெட்டில் 50-க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கும் பத்ரிநாத், இந்திய அணிக்காக ஆடியது வெறும் இரண்டே டெஸ்ட்டுகள்தான். இன்னொரு தமிழக வீரர் அபினவ் முகுந்த், இந்திய அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் 80 ரன்கள் அடித்துவிட்டு, வாய்ப்புக்குக் காத்திருக்கிறார். இப்படித் தமிழக வீரர்களால் நுழையமுடியாத, நுழைந்தாலும் நிற்கமுடியாத இரும்புக் கோட்டையில்தான் திறமையை மட்டும் கொண்டு நடராஜன், தன் தடம் பதித்திருக்கிறார்.

 

abd bowled

 

நடராஜன், டி.என்.பி.எல்லில் வீசிய யார்க்கர்கள், அவருக்கு ஐ.பி.எல் வாய்ப்பை பெற்றுத்தந்தது. அவர், ஐ.பி.எல்லில் வீசிய யார்க்கர்கள், குறிப்பாக அவர் ஏ.பி.டிவில்லியர்க்ஸ்க்கு வீசிய யார்க்கர்தான், அவருக்கு இந்திய அணியின் ராட்சச கதவுகளைத் திறந்தது. வருண் சக்கரவர்த்தி காயம்தான், நடராஜனுக்கு அதிர்ஷ்டமாக மாறி, அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க உதவியது. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது "தைரியசாலிக்கே அதிர்ஷ்டம் துணை நிற்கும்" எனும் பழமொழியை.

 

ஏனெனில், யார்க்கர் பந்தை வீசுவது எளிதல்ல. கொஞ்சம், பந்து பேட்ஸ்மேனுக்கு முன்பு பிட்ச் ஆனாலும் அல்லது பிட்ச்சாகாமல் பேட்ஸ்மேனிடம் வந்தாலோ, பந்தை பவுண்டரியை நோக்கி கடாசிவிடுவார்கள். அதானால்தான் யார்க்கருக்கு பெயர்போன பும்ராவே சில போட்டிகளில் யார்க்கர் போட யோசிப்பார். டிவில்லியர்ஸோ யார்க்கர் பந்துகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இந்த சிக்கல்களையெல்லம் மீறி, யார்க்கரில் டிவில்லியர்ஸின் மிடில் ஸ்டம்பை பறக்கவிட்ட தைரியம்தான், மற்ற நெட்பவுலர்களை தாண்டி நடராஜனை, இந்திய அணியில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.

 

cnc

 

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் மோசமான பந்துவீச்சுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் எழுப்பிய கேள்வி, அதிர்ஷ்டத்தால் எழுந்ததல்ல. அவரின் திறமையால் எழுந்தது. அந்த திறமையே மொஹம்மது ஷமி  போன்ற ஒரு பெரும் வீரருக்கு மாற்றாக ஆடும் அணியில் இடம்பிடிக்கக் காரணம். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரையும், கடைசி நேரத்தில் வெற்றியைப் பறிப்பதுபோல் ஆடிய இன்னொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்து, அதிர்ஷ்டத்தால் கிடைத்த இடம் எனக் கூறியவர்களுக்கு அழுத்தமான பதிலையும், எந்த பின்புலமுமில்லாமல், செல்வாக்குமில்லாமல் இந்திய அணியில் நுழைந்த தமிழக வீரர் என்ற வரலாற்றை எழுதியிருக்கிறார் நடராஜன் .  

 

ஆர்ம்ஸ்ட்ராங், நிலவில் கால் வைத்ததும், அதை மனிதக் குலத்தின் மாபெரும் பாய்ச்சல்  என அவர் கூற காரணம், அவரின் அந்த ஒரு அடி, மனிதக் குலம் அறிவியலால் பல அடிகளை எடுத்துவைக்கும் என்பதால். நிலவில் இடத்தை விற்பது முதல், விண்வெளியில் ஸ்பெஸ் ஸ்டேஷன் அமைத்துத் தங்குவது என அவரின் வார்த்தைகள் உண்மையாகியிருக்கிறது.

 

அதேபோல்தான், நடராஜன் இந்திய அணியில் பதித்த இடமும். திறமையை மட்டும் கொண்டே இந்தியாவிற்கு ஆடலாம் என்ற நம்பிக்கையை விதைத்து. இன்னும், பல தமிழக இளைஞர்களை இந்திய அணிக்கு ஆட வைக்கப்போகிறது. "ஏர் டெக்கானை ஆரம்பிக்கப் போராடும், நெடுமாறன் ராஜாங்கம், "ஏர் ஒட்டுபவனும் இனி ஏரோபிளேன்ல போவான்" எனச் சொல்வதைப் போல, தனது ஊரில் இலவச கிரிக்கெட்  பயிற்சி மையத்தை நடத்திவரும் நடராஜன், இனி மூலைமுடுக்கில் உள்ள  தமிழர்களும், இந்திய அணியில் தடம்பதிப்பார்கள் எனச் சொல்லாமால் சொல்கிறார்.

 

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.