ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
கடந்த முறை போல இம்முறையும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணியும், கடந்த முறை அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் தயாராகி வருவதால் தொடர் குறித்தான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் விராட் கோலி அணியை முன்னின்று நடத்துவார். அந்த நேரத்தில் அவர் அணியில் ஏற்படுத்துகிற கட்டமைப்பு, முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவர் இந்தியா திரும்பிய பின் பெரிய பங்கு வகிக்கும். ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களில் அவர்கள் வெற்றி பெறவில்லையென்றால் டெஸ்ட் போட்டிகளில் சிக்கலாகிவிடும். டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்துவிடுவார்கள் என்பது என்னுடைய கருத்து" எனக் கூறினார்.
தனக்கு முதல் குழந்தை பிறக்க இருக்கும் காரணத்தால், டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.