Skip to main content

இனி மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு!

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
Red

 

 

 

கால்பந்தாட்டப் போட்டிகள் மிகவும் ஆக்ரோஷமானவை. போருக்கு நிகராக நடக்கும் இந்தப் போட்டியில் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள் இடையே வாக்குவாதமும், சில சமயங்களில் கைக்கலப்புகளும் ஏற்படுவதுண்டு.  இதில் தொழில்நுட்பப் பிரிவுகளில் இருக்கும் மேலாளர்களின் நடத்தைகள் குறித்த மறுஆய்வு நடத்தியதில், இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பின் பங்குதாரர்கள் சிலர் ஒரு முடிவை முன்மொழிந்தனர். 
 

அதன்படி, போட்டி நடந்துகொண்டிருக்கும்போது அணியின் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் மேலாளர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால், அவருக்கு வீரர்களைப்போல் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் காட்டப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கால்பந்து கூட்டமைப்பு கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பொருந்தும் எனவும், பிரீமியர் போட்டிகளில் வாய்வழியான எச்சரிக்கைகள் மட்டும் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

போட்டி நிர்வாகிகளை நோக்கி தேவையற்ற சைகைகள் காட்டுவது, தண்ணீர் பாட்டில்களைத் தூக்கியெறிவது மற்றும் வீசுவது போன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள், கோட்களை கழற்றி வீசுவது மற்றும் நக்கல் செய்வது போன்ற எந்தக் குற்றங்களிலும் மேலாளர்கள் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை விதிக்கப்படும். நான்கு எச்சரிக்கைகள் விதிக்கப்பட்டால் ஒரு போட்டியில் கலந்துகொள்ளத் தடை வழங்கப்படும். இப்படி நான்கு நான்காக எச்சரிக்கைகள் அதிகரித்து பதினாறு எச்சரிக்கைகளை ஒருவர் பெற்றால், நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் குழுவின் விசாரணைக்கு ஆளாக்கப்படுவார்கள் எனவும் இந்த முடிவில் கூறப்பட்டுள்ளது.