Skip to main content

கோலியால் அந்த சாதனையை முறியடிக்க முடியாது! - ஆஸ்திரேலிய வீரர் பளிச்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
Steve

 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர் கோலி அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்தும், முந்தைய சாதனைகளை முறியடித்தும் வருகிறார். அந்தவகையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கரின் அதிவேக பத்தாயிரம் ரன்கள் சாதனையை முறியடித்தார். அதேபோல், தொடர்ந்து மூன்று சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். 
 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கோலியைப் பாராட்டி வருகின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரெய்ன் லாரா, கோலியைக் கிரிக்கெட்டின் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோலியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 
 

 

 

அவர் பேசுகையில், “கிரிக்கெட்டின் மீதான தீராத பசி, வெறி, காதல், அவர் காட்டும் ஸ்திரத்தன்மை, வேகம், ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது, இதுவரை உலக கிரிக்கெட் என்னென்ன சாதனைகளை வைத்திருக்கிறதோ... அதையெல்லாம் கோலி முறியடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் ப்ராட்மேனின் சராசரி 99.99 ரன்களை விராட் கோலியால் தொடவே முடியாது” என தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டான் ப்ராட்மேன் 99.99 சராசரி ரன்களை வைத்திருந்தார். ஆனால், தனது கடைசி போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறியதால், அவரால் சராசரியில் சதம் போடமுடியவில்லை. தற்போது, கோலியின் சராசரி ரன்கள் 75.23 என்பது குறிப்பிடத்தக்கது.