மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisment

kane williamson about including dhoni in newzealand cricket team

240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisment

இந்நிலையில் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், நேற்றைய ஆட்டம் குறித்து பேசினார். அப்போது இந்திய அணியின் பேட்டிங் பற்றி பேசிய அவர், "இது ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது. ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததே தோனியின் ரன்அவுட்தான். இதுபோன்ற தருணங்களில் தோனி பலமுறை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். தோனி களத்தில் இருக்கும்போது பதற்றமாகவே இருந்தது. ஆனால், கப்திலின் டைரக்ட் ஹிட் ரன்அவுட்தான் அனைத்தையும் மாற்றிவிட்டது. நேற்றைய பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகத்தான் இருந்தது. எனவே தோனியின் விக்கெட்டை வீழ்த்தத்தான் நாங்கள் அதிகமான முக்கியத்துவம் அளித்தோம். அதேபோல ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினர்" என கூறினார்.

அப்போது ஓய்வுக்கு பின் தோனியை நியூஸிலாந்து அணியில் சேர்த்துக்கொள்வீர்களா என அவரிடம் கேள்விகேட்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியாக சில நொடிகள் பார்த்துவிட்டு, பின்னர் சிரித்தபடியே பதில் கூற ஆரம்பித்தார்.

Advertisment

அப்போது அதற்கு பதிலளித்த அவர், "தற்போதைய நிலைப்படி தோனியால் சட்டரீதியாக நியூஸிலாந்து அணிக்கு விளையாட முடியாது. ஒருவேளை தோனி, இந்திய குடியுரிமையை விட்டு, நியூஸிலாந்து குடிமகன் ஆனால், அவரை உடனடியாக அணியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். அவ்வாறு தோனி மாறினால், நாங்கள் தோனியை நிச்சயம் அணிக்குள் எடுப்போம்" என கூறினார்.