Skip to main content

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.