Skip to main content

தோல்வியில் இருந்து மீளப்போவது மும்பையா? ராஜஸ்தானா? - ஐ.பி.எல். போட்டி #21

Published on 22/04/2018 | Edited on 22/04/2018

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

 

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் ஐ.பி.எல். சீசன் 11ன் மூலம் மீண்டும் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய அந்த அணி, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று பின்தங்கிய நிலையில் உள்ளது. 

 

இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 10 - 6 என்ற கணக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ஜெய்ப்பூர் மைதானத்தில் இந்த இரண்டு அணிகளும் களமிறங்கிய ஐந்து போட்டிகளில் 3 - 2 என்ற கணக்கில் ராஜஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. அதேபோல், 150+ ரன்களை ஜெய்ப்பூர் மைதானத்தில் சேஷிங் செய்த ஒரே அணியும் மும்பை இந்தியன்ஸ்தான்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், இன்றைய போட்டியில் 64 ரன்கள் எடுத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைப்பார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்லேக்னன் வெறும் 11 பந்துகளில் 4 முறை சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.