சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில், மகளிர் 10 ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். மேலும், அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரை நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பிரபலமான தடகள வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில், இன்று (06-08-24) ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடைப்பெற்றது. இதில், இந்தியாவின் சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறைந்தது 84 மீ தூரம் வரை ஈட்டி எறிந்தால் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், தகுதிச்சுற்றி பி பிரிவில் நீரஜ் சோப்ரா இன்று களமிறங்கினார். நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பிலேயே, அதிகபட்சமாக 89.34 மீ தூரம் வரை ஈட்டி எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா வீசிய இந்த தூரம், இந்த சீசனின் மிகச் சிறந்த தூரமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் களமிறங்கிய கிஷோர் ஜெனா முதல் வாய்ப்பில் 80.73 மீ தூரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் பவுலும், மூன்றாவது வாய்ப்பில் 80.21 மீ தூரம் வரை மட்டுமே எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார். இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது நடைபெறுகிற ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.