Skip to main content

ஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

team india

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய லபூஷனே 108 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இந்தியா, முதல் இன்னங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் (62), தாக்குர் (67) ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா, மழையினாலும் இந்திய பந்துவீச்சினாலும் தடுமாறியது. இருப்பினும் ஸ்டீவன் ஸ்மித்தின் (55) உதவியோடு 294 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

328 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5ஆம் நாளான இன்று (19.01.2021), கில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரஹானேவும் விரைவில் வெளியேறினார். பொறுமையாக ஆடிய புஜாரா 211 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் ரிஷப் பந்த், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்டுவிட்டு நிதானமாக ஆடினார். அதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தொடங்கியது.

 

இறுதிக்கட்டத்தில் மயங்க் அகர்வால் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிபெறவைத்தனர். 23 வயதான ரிஷப் பந்த் 138 பந்துகளில் 89 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை என்ற சாதனைக்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

தடைகளைத் தாண்டும் ரிஷப் பண்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

cricketer rishabh pant instagram viral video after car incident treatment 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும் சிரமத்திற்கு இடையில் படிக்கட்டின் கைப்பிடி உதவியுடன் ரிஷப் பண்ட் நடந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரண விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும் குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும் கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.