Skip to main content

தோல்வியடையாத தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி முனைப்பில் இந்தியா.. என்ன நடக்கும் இன்று..?

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

India in series win.. South Africa who have not lost so far.. what will happen today

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

 

ஆசிய கோப்பை தோல்விக்கு பின் ஆஸியுடனான தொடரிலும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த இரு போட்டிகளிலும் வென்று அசத்தியது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பந்து வீச்சு மட்டுமே. 

 

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட போதில் இருந்து தங்கள் அணி நிர்ணயித்த குறைவான இலக்கையும் எதிரணியை எட்ட விடாமல் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் அதகளம் செய்தவர் ரோஹித் சர்மா. ஆனால் ஆஸியுடனான முதல் போட்டியில் ஏறத்தாழ 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் ஆஸியை வெல்ல வைத்து அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் என்பதால் முயற்சிகள் மற்றும் சோதனைகள் அனைத்தையும் முயன்று பார்க்க இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

 

உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள அஷ்வின் ஆஸியுடனான தொடரில் களமிறக்கப் படவில்லை. இந்த தொடரில் கண்டிப்பாக அவர் விளையாடுவது அவசியம் என பார்க்கப்படுகிறது. பும்ரா, ஹர்ஷல் படேல் தங்கள் ஃபார்மிற்கு திரும்பினால் எதிரணி கண்டிப்பாக திணறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

மறுபுறம் பவுமா தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் டி காக், ரோசவ், மார்க்ரம், மில்லர் என ஒரு படை காத்திருந்தால் மறுபுறம் பந்துவீச்சில் ரபாடா, நோர்க்டியா, பிரிட்டோரியஸ், ஜேன்சன் என பட்டாளம் காத்திருக்கிறது. 

 

இரு அணிகளின் பலத்தை ஒப்பிடுகையில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு படி மேலேதான் உள்ளது. இருந்தும் இந்திய அணி புயலாய் எழுந்து நின்று தென் ஆப்பிரிக்காவை தன் சுழலுக்குள் சிக்க வைக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.  மேலும் இந்திய மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிட்ரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இதுவரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11ல் இந்தியாவும் 8ல் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியா உத்தேச வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல்.

 

தென்ஆப்பிரிக்கா உத்தேச வீரர்கள் : குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ரோசவ் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பிரிட்டோரியஸ் அல்லது பெலுக்வாயோ, ஷம்சி, ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன்.