ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.
மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.