Skip to main content

"இந்திய டிவில்லியர்ஸ்"... இளம் வீரரைப் புகழ்ந்த ஹர்பஜன் சிங்!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

Harbhajan Singh

 

கடந்த இரு மாதங்களாக அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐ.பி.எல் தொடரானது, தற்போது நிறைவு பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற மும்பை அணி, 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் பல இளம் வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் சூர்யகுமார் யாதவ். மும்பை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், 4 அரை சதங்களுடன் 480 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "சூர்யகுமார் யாதவ் தன்னை மும்பை அணியில் முக்கியமான வீரராக மாற்றிக்கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பேட்டிங்கில் கூடுதல் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவர் பல வகையான ஷாட்டுகள் விளையாடுவதால் அவரைக் கட்டுப்படுத்த இயலாது. கவர் திசையில் நன்றாக விளையாடுகிறார். ஸ்வீப் வகை ஷாட்டுகளும் அடிக்கிறார். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டிற்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இந்திய அணியில் அவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு என்பது அவருக்கு வெகுதூரம் இல்லை. சூர்யகுமார் யாதவ் இந்திய டிவில்லியர்ஸ்" எனக் கூறினார்.

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்?

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

New captain for Indian cricket team?

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை நவம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. உலக கோப்பை முடிந்தவுடன் தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

 

உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், அந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார். இனி டி20 தொடர்களுக்கு ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பந்தை தடுக்க முயன்ற போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலே வெளியேறினார். தொடர்ந்து காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்தே வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.

 

இந்நிலையில், உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், காயம் குணமாக இன்னும் இரண்டு மாத காலம் தேவைப்படுவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் டி20 அணிக்கு யார் கேப்டனாக செயல்படப் போகிறார் என  எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், துணை கேப்டனாக இருந்த சூர்யகுமார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

"ஒன்றாக சேர்ந்து வெற்றி பெறுவோம்" - விமர்சனத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

harbhajan singh advice for indian cricket fans tweets 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்த விமர்சன பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில், “தோனி மட்டும்  தனியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பைகளை வென்று கொடுத்தாரா. அணியில் இருந்த மற்ற 10 வீரர்கள் விளையாடவில்லையா. ஆஸ்திரேலியா போன்ற மற்ற  நாடுகள் உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியினர் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றால் கேப்டன் வென்றார் என்று கூறப்படுகிறது. ஒன்றாக  சேர்ந்து வெற்றி பெறுவோம்; ஒன்றாக சேர்ந்து தோல்வி அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.