இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் திருவிழா, கரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் இந்தியாவிலேயே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வீரர்களைத் தேர்ந்தெடுக்க சிறிய அளவிலான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஏலத்துக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள், தங்கள் அணி வீரர்களை விடுவிக்கவுள்ளனர். ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் நாளை (21.01.2021) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், சென்னை அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக கூறி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "சென்னை அணியுடனான எனது ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. சென்னை அணிக்காக விளையாடுவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அழகான நினைவுகள் உருவாகின. நான் பல வருடங்கள் அன்பாக நினைவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சிறந்த நண்பர்கள் கிடைத்தார்கள். அற்புதமான இந்த இரண்டு வருடங்களுக்காக சென்னை அணி, சென்னை அணி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், சென்னை அணியிலிருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது. மேலும் சென்னை அணியுடனான அவரின் பயணம் முடிவுக்கு வருகிறது. ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சொந்த காரணங்களுக்காக வெளியேறினார் என்பதும், சென்னை ரசிகர்கள் அவரது தமிழ் ட்விட்டிற்காக, அவரைத் ‘தமிழ் புலவர்’ என அழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.