Skip to main content

ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானதா..? எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1

Published on 31/10/2020 | Edited on 24/04/2021

 

ipl

 

மும்பையில் ஒரு குடியிருப்பு வளாகம். இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கிரிக்கெட். நேராக அடித்தால்தான் நான்கு ரன்கள் கிடைக்கும் என்பதால், ஒரு சிறுவன் பந்தை தரையோடு தரையாக பவுலரை தாண்டியே ட்ரைவ் ஆடிக்கொண்டிருக்கிறான். களம் மாறுகிறது. 'ரஞ்சி ட்ரோபி'யில் அதே போல் ஒரு ட்ரைவ், அந்த ஸ்ட்ரெயிட் டிரைவ்தான், அன்றைய போட்டியைப் பார்த்தவர்கள் அன்று முழுவதும் பேசிய 'ஹாட் டாபிக்'. பேசவைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.

 

நான் என்னுடைய மாநில 'ரஞ்சி' அணியில் இடம்பெற போராடிக் கொண்டிருக்கும்போது சச்சின் உலகின் அதிவேக ஆடுகளத்தில் சதம் அடித்துக் கொண்டிருந்தார் என்றார் டிராவிட். மற்றவீரர்கள் மாநில அணிக்கு ஆட காத்திருந்தபோது, இந்தச் சிறுவன் எப்போது ஆட்டமிழப்பான், நாம் போட்டியை வெல்லலாம் என எதிரணியைக் காக்கவைத்தவர் சச்சின். பெர்த்தில் அவரின் முதல் சதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியூஸ், இந்தச் சிறுவன் உன்னைவிட அதிக ரன்களை குவிக்கப் போகிறான் என்று தனது கேப்டன் ஆலன் பார்டரிடம் கூறினார். அப்போது பார்டர் தான் டெஸ்ட்களில் அதிக ரன்கள் குவித்திருந்தவர். அப்போதே வயதுக்கு மிஞ்சிய திறமையோடு ஆடினார் சச்சின். 

 

முதல் டெஸ்ட் தொடரிலேயே மூக்கில் அடிவாங்கியதாலோ என்னவோ எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குப் பணிந்ததில்லை சச்சின். இந்திய பேட்ஸ்மேன்களில் வேகப்பந்து வீச்சை இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியவர்கள் யாருமில்லை எனப் புகழ்ந்தார் டிராவிட். அந்தளவிற்கு வேகப்பந்து வீச்சைப் பந்தாடியவர் சச்சின். 'பிரெட் லீ', 'மெக்ராத்', 'அக்தர்' என அவர் காலத்தின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம் அவர்தான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சையும் சச்சின் என்றும் விட்டதில்லை. உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் 'முரளிதரனா', 'வார்னேவா' என்பது வேண்டுமானால் பெரிய விவாதமாக இருக்கலாம். ஆனால், தங்களை எதிர்த்து ஆடியதில் சிறந்த வீரர் யார் என்பதில் இருவருக்கும் எந்த விவாதமும் இல்லை. இருவருமே தங்கள் காலத்தின் சிறந்தவர் சச்சின் என பலமுறை கூறியுள்ளார்கள். சச்சினின் இருபத்தைந்தாவது பிறந்தநாளில், அவரது பேட் வார்னேவின் சுழலைச் சுழற்றி அடிக்க, நான் தூங்கும்போது கூட எனது கனவில் சச்சின் 'சிக்ஸர்' அடிப்பதுதான் நினைவுக்கு வரும் எனக் குறிப்பிட்டார் வார்னே. 

 

கிரிக்கெட் வீரர்களுக்கு முப்பது வயது தாண்டினாலே எப்போது ஓய்வு எனக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். 35 வயது தொட்டால் என்றைக்கு ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள் என வீரர்கள் சொல்லும் முன்பே, மற்றவர்கள் 'வழியனுப்பு விழா'வைத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், சச்சின் 35 வயதுக்கு மேல் செய்த சாதனைகள் பல. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட்களில் அதிக ரன்கள் என்ற லாராவின் சாதனையைத் தகர்த்தது என வயது ஒரு நம்பர்தான் என்பதை நடைமுறையில் செய்து காட்டியவர் சச்சின். ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானது என்ற எண்ணம் இருந்த காலத்தில், இது இளம் வீரர்களுக்கானது என்றால் நானும் 35 வயதைக் கடந்த இளைஞர்தான் என 37 வயதில் ஆரஞ்ச் கேப், 38 வயதில் சதம் என அதிலும் ஆடிக்காட்டியவர் சச்சின். சச்சின் தனது நாற்பது வயதில் ஓய்வை அறிவித்தார். இறுதியாக ஒரு சர்வதேச தொடரில் மட்டும் விளையாடி விடை பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு ரஞ்சியில் மும்பைக்கு ஆடி அந்த அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார் சச்சின். அந்த வயதிலும் எத்தனையோ சாதனைகள் புரிந்த பின்பும், உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தயங்கியதில்லை. கிரிக்கெட் மீதான காதல் அவரிடம் குறைந்ததில்லை. 

 

nkn

 

சச்சின் ஓய்வை அறிவித்த சிலகாலத்திலேயே மக்கள் அவரை மறந்து விடுவார்கள் எனக் கூறினார் பாகிஸ்தான் வீரர் ஜாவீத் மியாந்தத். ஆனால், அவரின் ஓய்வுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து, ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடந்த ஒரு தொடரில், சச்சின் விளையாடிய, ஒரே ஒரு ஓவர், அடுத்த சில நாட்களுக்கு ட்ரெண்டிங்கில் இருந்து மறையவில்லை. ஒரு ஓவர் ஆடியதே சமூக வலைதள ட்ரெண்டிங்கில் இருந்து மறையாதபோது கால் நூற்றாண்டாக இந்தியாவுக்கு ஆடியவர் மக்கள் மனதில் இருந்து மறைவாரா? நிச்சயம் இல்லை. என்றும் அவர் சாதனைப் பட்டியலிலும் மக்கள் மனதிலும் கிரிக்கெட்டின் மறுபெயராக நிலைத்திருப்பார்...

 

 

சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.